

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் முதல்வர் பழனிசாமி மாற்றப்படுவார். முதல்வர் பழனிசாமி எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ''குடும்ப அரசியல் கூடாது என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம். கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஜனநாயக முறையாக இருக்காது.
முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து என்னை பிரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா குடும்பத்தினர் கடந்த 2006-ம் ஆண்டுமுதல் எனக்குச் செய்த கெடுதல்கள், அவமானங்கள் 100 சதவீதத்தில் 10 சதவீதத்தைத்தான் கூறியுள்ளேன். மீதமுள்ளவற்றை என்னுள்ளே புதைத்துவிட்டேன் என்றுதான் சொன்னேன்.
அதிமுக கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்ப ஆதிக்கத்தின் கீழ் போய்விடக்கூடாது என்ற கொள்கையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம். சசிகலா, தான் கட்சியின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று நிர்பந்தித்தார். கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே அவரை முன்நிறுத்தினோம். பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, முதல்வராக விரும்பினார்
பொதுமக்கள் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதாக சில அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர். சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதாலேயே அதிமுகவில் பிரச்சினை வெடித்தது. அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மூத்த நிர்வாகிகள் என்னிடம் கூறினர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து என்னிடம் யாரும் விளக்கியது இல்லை. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும் வரை தர்மயுத்தம் ஓயாது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த உத்தரவிடப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதியின் ஒட்டுமொத்த மக்களும் எங்களுக்கு மிகுந்த வரவேற்பு கொடுக்கின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் 61 வேட்பாளர்களும் எங்களுக்கு எதிரிதான். எங்கள் சின்னம் இரட்டை மின்விளக்குகளுடன்கூடிய மின்கம்பம். அதில் ஒரு விளக்கு எம்.ஜி.ஆர்., மற்றொன்று ஜெயலலிதா. இரு தலைவர்களும் ஒளிவிளக்காக இருந்து எங்களுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து டிடிவி தினகரன், மக்களை ஏமாற்ற பார்க்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் முதல்வர் பழனிசாமி மாற்றப்படுவார். அப்போது, முதல்வர் பழனிசாமி எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம்.
பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைதாகியுள்ள சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை'' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.