வங்கி மேலாளர் பேசுவதாக கூறி சென்னையில் மோசடி கும்பல் மீண்டும் கைவரிசை: வாடிக்கையாளர்களின் பணம் சுருட்டல்

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி சென்னையில் மோசடி கும்பல் மீண்டும் கைவரிசை: வாடிக்கையாளர்களின் பணம் சுருட்டல்
Updated on
2 min read

வங்கி மேலாளர் போல பேசி, வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் மோசடி சென்னையில் மீண்டும் நடந்துள்ளது. இதுபோன்ற மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க காவல் ஆணையர் ஆலோசனை கூறியுள்ளார்.

வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளை யடித்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. வங்கி வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண் களை கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் முதலில் தெரிந்து கொண்டனர். ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றனர். பிறகு, போலி கார்டு தயாரித்து, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைச் சுருட்டினர்.

இதுபோல, கந்தன்சாவடியில் உள்ள ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சுமார் 400 பேரின் பணம் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி மேலாளர் ஆர்.சந்தோஷ் குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட ஹரியாணாவைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இதேபோன்ற மோசடி தற்போது மீண்டும் நடந்துள்ளது. இதனால் பாதிக் கப்பட்டுள்ள பெருங்குடி மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரான்சிஸ் சேவியர் கூறியதாவது:

வங்கி மேலாளர் பேசுவதாக போன் வந்தது. இந்தி கலந்த தமிழில் பேசினார். எனது ஏடிஎம் கார்டின் ஆயுட்காலம் முடியப்போவதால், அதைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி, கார்டில் இருக்கும் 16 இலக்க எண் மற்றும் ரகசிய எண்ணைக் கேட்டார். நானும் வங்கி மேலாளர்தான் பேசுவதாக நம்பி, அந்த எண்களைத் தெரிவித்தேன். சிறிது நேரத்தில் என் வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாயமாகிவிட்டது. இதுகுறித்து திருவான்மியூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புகார் தெரிவித்துள்ளேன். என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘வங்கி மேலாளர் என்று பேசி ஏமாற்றும் மோசடி நபர்கள் பெரும்பாலும் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில்தான் உள்ளனர். தமிழகத்தில் இல்லை. அவர்கள் அங்கு இருந்தவாறே மோசடி செய்கின்றனர். வங்கி மோசடி தொடர்பாக இந்த ஆண்டு மட்டும் 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

ஆணையர் ஆலோசனை

மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க காவல் ஆணையர் டி.கே ராஜேந்திரன் வழங்கியுள்ள ஆலோசனைகள்:

* வங்கி அதிகாரிகள் போனில் தகவல் கேட்பதில்லை. எனவே, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தொலைபேசியில் தகவல் கேட்டால் தெரிவிக்காதீர்கள்.

* வங்கியின் பெயரால் வரும் அழைப்புகள், உண்மையிலேயே வங்கியில் இருந்துதான் வருகிறதா என்று சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.

* நீங்கள் மேற்கொள்ளாமலே பணப் பரிவர்த்தனை நடந்திருந் தாலோ, வங்கிக் கணக்கில் உங்களை அறியாமல் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருந்தாலோ உடனே வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்.

* உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவரின் கணக்குக்குப் பணம் மாற்ற தொலைபேசி வாயிலாக ஒப்புதல் அளிக்க வேண்டாம்.

* உங்களது செல்போனுக்கு வாய்ஸ் மெயில், குறுந்தகவல் வந்தால் அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டாம்.

* மோசடி ஆசாமிகள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in