

ஒரு காலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கேற்ற சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் என்றெல்லாம் ஓஹோவென இருந்த தொகுதிதான் தென்சென்னை. ஆனால், மறுசீரமைப்பில் சேர்க்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் போதுமான வசதிகள் செய்யப்படாததால் அங்கெல்லாம் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.
# தென்சென்னை தொகுதியில் ஏற்கெனவே இருந்த பழைய நகரப் பகுதிகளில் சாலை, சாக்கடை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவே இருக்கின்றன. ஆனால், மறு சீரமைப்பில் சேர்க்கப்பட்ட விருகம்பாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கே அடித்துக்கொள்ளும் நிலை.
# பொதுவாக, தொகுதி முழுவதிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பெருநிறுவனங்கள் பெருக்கத்தால் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன.
# தொகுதியின் மிகப் பெரிய அதிருப்தியாக மக்கள் சொன்னது, பெருங்குடி குப்பைக் கிடங்குதான். இதனால் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் சுவாசநோய்கள் ஏற்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் பார்வையை மறைக்கும் அளவுக்குப் புகை மண்டலம் உருவாவதால் விபத்துகளும் சகஜம். காலம்காலமாக இங்கே கொட்டப்பட்டுவரும் குப்பையால் நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது.
# மயிலாப்பூர், தி.நகர் மற்றும் சைதாப்பேட்டையின் சில பகுதிகளில் சாலை, சாக்கடை, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு இருக்கின்றன. குறிப்பாக, சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வித்தரம் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள் மாணவர்கள்.
# தரமணி, வேளச்சேரி பகுதிகளில் அரசு மருத்துவமனையோ அரசுக் கல்லூரியோ கிடையாது. கொசுக்களின் சரணாலயம் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது தரமணி. இதனால், இந்தப் பகுதியில் மலேரியாவின் ஆதிக்கம் அதிகம். உட்புறச் சாலைகளும் படு மோசம். செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் போன்ற இடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. பேருந்து வசதியும் மிகக் குறைவு. இந்தப் பகுதிகளைப் பார்த்தால் சென்னை என்றே சொல்ல முடியாது.
# வேளச்சேரி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டம் மூன்று ஆண்டுகளாக ஏட்டளவிலேயே உள்ளது. வேளச்சேரி - மவுண்ட் பறக்கும் ரயில் பணிகளும் நிறைவு பெறவில்லை. அதேசமயம் தி.நகர், மயிலாப்பூர், தரமணி, வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் வசதிகள் தாராளமாக இருப்பதால், மக்கள் சிரமம் இல்லாமல் இடம்பெயர்கிறார்கள்.
# போக்குவரத்து நெரிசல் மற்றும் இடநெருக்கடியால் தி.நகரில் மூச்சு முட்டுகிறது. இவ்வளவுக்கும் இங்கு மூன்று இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், நெரிசல் குறைந்தபாடில்லை.
# வேளச்சேரி - தரமணி சாலை, குருநானக் கல்லூரி - செக்போஸ்ட், ஓ.எம்.ஆர்., ஆற்காடு சாலை மற்றும் வேளச்சேரி பகுதிகளில் சாலை வசதிகள் நன்றாக இருந்தாலும் அதிகரித்துவிட்ட வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதனால், இங்கெல்லாம் மேம்பாலங்கள் தேவை என்கின்றனர் மக்கள்.
# தி.நகரின் அடுக்குமாடிக் கட்டிடங்களில் விதிகளை மீறிக் கட்டப்பட்டவை என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் மிகக் குறுகியவை. தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் உள்ளே சென்று திரும்ப முடியாது.
# மயிலாப்பூரில் நடைபாதைகளைத் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே. மட் சாலை, கச்சேரி சாலைகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன.