ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பஸ், லாரி, ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் இன்று கடைகள் அடைப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பஸ், லாரி, ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் இன்று கடைகள் அடைப்பு
Updated on
2 min read

சினிமா காட்சிகள் ரத்து; தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடக்கிறது. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து, லாரி, ஆட்டோ தொழிலாளர் களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடு கின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் மூடப்படுகின்றன. அரசுப் பேருந்து, ஆட்டோ தொழிற்சங் கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள மாணவர்கள், இளைஞர் களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளோம். எங்கள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தமிழகம் முழுவதும் 20-ம் தேதி (இன்று) கடைகள் அடைக்கப்படும். வணிகர்கள் மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்’’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா நேற்று வெளியிட்ட அறிக்கை யில், ‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மாணவர்கள், இளைஞர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு நடத்துவது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் கருப்புச் சட்டை அணிந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அரசு போக்கு வரத்து ஊழியர் தொழிற்சங்கங்களின் சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பல்லவன் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், கி.நடராஜன் (தொமுச), ஜி.சுகுமார், அ.சவுந்தரராஜன் (சிஐடியு), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக தொமுச பொரு ளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து 24 மணி நேரம் பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் 1.43 லட்சம் ஊழியர்களில் பெரும்பாலானோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர்’’ என்றார்.

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போதிய அளவில் பேருந்துகள் இயக் கப்படும். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது’’ என்றனர்.

4 லட்சம் லாரிகள்

‘‘ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி, இன்று ஒருநாள் தமிழகத்தில் உள்ள 4 லட்சம் லாரிகள் இயங்காது’’ என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ‘‘காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படும். இது முதல்கட்ட போராட்டமாக அறிவித்திருந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட போராட்டம் தொடரும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாளை (இன்று) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஓடாது’’ என்றார்.

‘‘ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று செயல்படாது’’ என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் திரை யரங்குகளில் இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடிகர், நடிகைகள் இன்று மவுனப் போராட்டம் நடத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in