ஊராட்சித் தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க முடியாது: ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊராட்சித் தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க முடியாது: ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on

விருதுநகர் மாவட்டம் ஆனைக் குட்டம் ஊராட்சி தலைவராக இருப்பவர் எம்.கண்ணன். இவர் மீது நிதி மோசடி புகார் கூறப் பட்டது. இதையடுத்து இவரிடம் இருந்து ஊராட்சி காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து, அந்த அதிகாரத்தை சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் ஒப்படைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலையில் உத்தரவிட்டார்.

இதனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கண்ணன் மனு தாக்கல் செய்தார். அதில், “ஊராட்சித் தலைவரிடம் இருந்து காசோலையில் கையெழுத் திடும் அதிகாரத்தை பறிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை யின்போது அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் மீது பல்வேறு நிதி மோசடி புகார்கள் கூறப்பட்டன.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஊராட்சி உதவி இயக்குநர் உத்தரவிட்டார். 2011 முதல் 2013 வரையிலான ஊராட்சி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில் ரூ.2.65 லட்சம் வரை ஊராட்சி நிதி மோசடி செய் யப்பட்டது தெரியவந்தது. இதை யடுத்தே காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது” என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஊராட்சித் தலைவரிடம் இருந்து காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ய அவசர கால அதி காரத்தை மாவட்ட ஆட்சியர் பயன் படுத்தியது தவறானது. மனுதார ரின் அதிகாரத்தை பறித்ததற்கு அரசு தெரிவித்துள்ள காரணங்கள் போதுமானதாக இல்லை.

இதுபோன்ற வழக்கு ஒன்றில் ஊராட்சித் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சித் தலைவர்களின் அதிகாரங்களை, ஆட்சியர் பறிக்க முடியாது. ஆட்சியரின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in