

மத்திய அரசைக் கண்டித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் 29-ம் தேதி (நாளை) முதல் தொடங்கப்படும் என்று கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று சென்னையில் கூறியதாவது:
பாஜக ஆட்சியில் விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. பெருநிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. விவசாய கடன்களை ரத்து செய்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
இறைச்சிக்காக கால்நடைகள் விற்பதற்கு தடை விதித்துள்ளனர். ஒரு நாடு, ஒரு வரி, ஒரு உணவு என சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது, நீட் தேர்வில் விலக்கு அளிக்காமல் இருப்பது என செயல்படுகின்றனர். தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.
தமிழக உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க தமிழக அரசு கடுகளவு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளும் பாஜகவுக்கு ஒருசேர ஆதரவு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு மக்கள் நலனை புறக்கணிக்கிறது.
இவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘இந்தியாவை மீட்போம், தமிழ்நாட்டைக் காப்போம்’ என்ற பெயரில் பிரச்சார இயக்கம் ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை தமிழகம் முழுவதும் நடக்கும். இதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், திருவள்ளூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்படும். இந்த பிரச்சார பயணங்களின்போது ஆங்காங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படும்.
இறுதியாக ஜூலை 5-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர்கள் ஆர். நல்லகண்ணு, தா. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். பொதுக்கூட்டம் முடிவில் மிகப்பெரிய அளவில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.