Published : 28 Feb 2017 12:29 PM
Last Updated : 28 Feb 2017 12:29 PM

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு டீ, சிற்றுண்டி நிலுவை ரூ.1.92 கோடி: நடப்பு ஆட்சியில் இதுவரை ரூ.23.60 லட்சம் செலவு

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு தனியார் உணவகங்களில் இருந்து டீ, சிற்றுண்டி வாங்கி தற்போது நிலுவையில் ரூ.1.92 கோடி உள்ளது. நடப்பு ஆட்சியில் இதுவரை ரூ. 23.6 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. அரசு சார்ந்த நிறுவனங்களில் இதை வாங்க உத்தரவிடுமாறு ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர்கள், அரசு கொறடா அலுவலகங்கள் உள்ளன. இங்கு அவர்களை சந்திக்க வரும் பொதுமக்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோருக்கு டீ, சிற்றுண்டி தருவது வழக்கம். கடந்த ஆட்சியில் டீ, சிற்றுண்டி வாங்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு பெற்று ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, 'தி இந்து'விடம் கூறியதாவது:

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர்களின் அலுவலகங்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்கள், பார்வையாளர்களுக்கு டீ மற்றும் சிற்றுண்டி தர அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடுகிறது. இவை தனியார் நிறுவனங்களில் வாங்கப்படுகின்றன. கடந்த ஆட்சியாளர்களால் தனியார் உணவகங்களில் டீ வாங்கப்பட்ட வகையில் பட்டுவாடா செய்யப்பட்டது போக நிலுவைத் தொகையாக ரூ. 1 கோடியே 92 லட்சம் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

புதிய அமைச்சரவை பதவியேற்றபோதும் அவரவருக்கு வேண்டப்பட்டவர்களின் தனியார் உணவகங்களில் டீ வாங்குவதால் அரசு நிதி தொடர்ந்து கோடிக் கணக்கில் வீணாகிறது.

தனியார் உணவகங்களுக்கு பதிலாக கூட்டுறவு நிறுவனங்களான பாண்லே, இந்தியன் காபி ஹவுஸ், லே-கபே ஆகியவற்றில் வாங்கலாம். இதனால் அரசு நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும். அரசு நிதி வீணாவது தவிர்க்கப்படும். இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடியிடம் மனுவாக தந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x