

புதிய நீதிபதிகள் நியமனத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பட்டியலை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித் துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்காக 10 வழக்கறிஞர்கள் உள்பட 12 பேர் கொண்ட பட்டியலை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பட்டியலில் எல்லா சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும், ஏற்கெனவே நீதிபதி பதவியில் உள்ள சில சமூகங்களைச் சேர்ந்தவர்களையே இப்போதும் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறி பிரச்சினை எழுந்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள பட்டியலை திரும்பப் பெற வேண்டும். எல்லா சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தகுதியான வழக்கறிஞர்களை வெளிப்படையான முறையில் நீதிபதிகளாக நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 8-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) மீண்டும் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே நீதிமன்றங் களைப் புறக்கணித்த வழக் கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் கினி மானுவல், செயலாளர் எஸ்.அறிவழகன், வழக்கறிஞர்கள் ப.விஜேந்திரன், சி.விஜயகுமார், எஸ்.சத்தியச்சந்திரன், முத்துராம லிங்கம் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள் கினி மானுவல் மற்றும் சி.விஜயகுமார் ஆகியோர், “உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நீதிபதிகள் நியமனத்துக்கான பட்டியல் திரும்பப் பெறப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தனர்.