

நில அபகரிப்பு புகாரில் போலீஸார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம் பட்டு தாலுகா, மேல்செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தரணி. இவர், தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கோபி, சேகர் ஆகியோரிடம் அடகு வைத்து, கடந்த 2011-ம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த கடன் தொகையை வட்டி, அசலுடன் தரணி திருப்பிக் கொடுத் தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் பாக்கி இன்னும் இருப்பதாகக் கூறி கோபி, சேகர் ஆகியோர் தரணியை மிரட்டி, 6 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரில் பதிவு செய்ய முயன்றதாகத் தெரிகிறது.
இதையடுத்து, 2013-ம் ஆண்டில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தரணி வழக்கு தொடர்ந்தார். மேலும், மாவட்ட நில அபகரிப்புப் பிரிவிலும் புகார் செய்தார்.
மனுவைப் பெற்ற போலீஸார், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், 6 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு கோபி, சேகர் ஆகியோர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறி, தரணியின் தாயார் கஸ்தூரி, மனைவி மஞ்சு, மகள் நேத்ரா ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை மனு அளிக்க வந்தனர்.
அப்போது ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்தில் இருப்பதாக தெரிவித்து, ஆட்சியரை சந்திக்க முடியாது என அலுவலக ஊழியர்கள் கூறியதால், ஆவேசமடைந்த மஞ்சு தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை, தன் உடல் மீதும், மாமியார் மற்றும் மகள் உடல் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன் றார்.
உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவர்களை மீட்டனர். பிறகு ஆட்சியர் ராமனிடம் மஞ்சு மனு அளித்தார்.
இருப்பினும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மஞ்சு, கஸ்தூரி ஆகியோரிடம் சத்துவாச்சாரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.