

கர்நாடகத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசும் கர்நாடக அரசும் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அன்புமணி கூறியிருப்பதாவது:
தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கர்நாட கத்துக்கு ராணுவப் படைகளை அனுப்ப வேண்டும். பிரதமரும், உள்துறை அமைச்சரும் உடனடி யாக பெங்களூரு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார் வையிட வேண்டும்.
தமிழர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். வன்முறை யால் சேதமடைந்த தமிழர்களின் உடைமைகளுக்கு மத்திய அரசும் கர்நாடக அரசும் இணைந்து இழப்பீடு வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் காவிரி நீர் பங்கீட்டில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன், நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில்அன்புமணி தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வருக்கு கடிதம்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில், ‘கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று, அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். தமிழர்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தாக்குதலில் காயமடைந்த மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான தமிழக மக்களுக்கு இடர் உதவியும், இழப்பீடும் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.