பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்: சாக்கடை நீர் கலப்பதாக குற்றச்சாட்டு

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்: சாக்கடை நீர் கலப்பதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொன்மலை பகுதிக்குழு சார்பில் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்மலை கோட்டத்துக் குட்பட்ட பட்டத்தம்மாள் தெரு, புதுத் தெரு, செம்பட்டு, என்.எம்.டி., எம்.கே.டி. காலனி, காமராஜ் நகர், முஸ்லிம் தெரு, விஎம்டி சாலை, கலைவாணர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு வரும் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட விஷக் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

இந்த தெருக்களில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் அடைத்துக்கொண்டு தேங்கியுள்ளன. இவற்றைத் தூர் வார வேண்டும். வார்டு முழுவதும் கொசுக்கள் அதிகம் இருப்பதால் முழுமையாக கொசு மருந்து அடிக்க வேண்டும். தார் சாலை இல்லாத தெருக்களில் தார் சாலை அமைக்க வேண்டும். புதுத்தெரு, செம்பட்டு பகுதிகளில் பொதுக் கழிப்பிடம் இல்லாத காரணத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு, வாலிபர் சங்க பொன்மலை பகுதிக்குழு செயலாளர் டி.விஜேந்திரன் தலைமை வகித்தார். சங்க மாநகர முன்னாள் தலைவர் மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழுச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in