ஜல்லிக்கட்டு சட்டமுன் வடிவு: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

ஜல்லிக்கட்டு சட்டமுன் வடிவு: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
Updated on
2 min read

தமிழகத்தின் “கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை” காப்பாற்றிட வழிவகை செய்திட முனைந்துள்ள இந்த சட்டமுன்வடிவினை வரவேற்று உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (23-1-2017) மாலை நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தமிழக அரசு “ஜல்லிக்கட்டு” சட்டமுன் வடிவு தாக்கல் செய்தபோது, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் – தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமுன் வடிவின்மீது ஆற்றிய உரை பின்வருமாறு:-

தமிழகத்தின் “கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை” காப்பாற்றிட வழிவகை செய்திட முனைந்துள்ள இந்த சட்டமுன்வடிவினை வரவேற்று உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாணவர்கள், இளைஞர்கள், தமிழக மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த சட்ட முன்வடிவினை கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது, மாணவர்களின் எழுச்சியால் தமிழகத்தில் நடைபெற்ற “மொழிப் புரட்சி” என் நினைவுக்கு வருகிறது. மாணவர்கள் சக்தி ஆட்சியை சிந்தித்து செயல்பட வைக்கக் கூடிய சக்தி என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆகவே, இந்த சட்ட முன்வடிவை நான் வரவேற்கிறேன்.

கடந்த 21-1-2017 அன்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட முதலமைச்சர் போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து, தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விளக்கிச் சொல்லி, இனியும் ஜல்லிக்கட்டு தடைபடாது என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டும். அப்படி செய்யத் தவறியதால், இன்றைக்கு ஜனநாயக ரீதியில், அமைதியான அறவழியில் நடைபெற்ற போராட்டம் அசாதாரண சூழலை நோக்கி நகர்ந்து விட்டது.

ஆட்சியிலிருப்பவர்கள் பேசி முடிக்க வேண்டிய பிரச்சினையை காவல்துறையின் கையில் கொடுத்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் தடியடி நடத்தி மாணவர்களையும் பொது மக்களையும் கலைக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது என்று எண்ணும்போது வேதனை அளிக்கிறது.

இதேபோன்றதொரு சட்ட முன்வடிவை திராவிட முன்னேற்றக் கழக அரசு சட்டமாக கொண்டு வந்தது.

2009-ல் கொண்டு வரப்பட்ட “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டம்” ஜல்லிக்கட்டு எவ்வித தடையின்றி நடத்திடவே கொண்டு வரப்பட்டது.

அந்த சட்டத்தின் விளைவாக, கழக ஆட்சி இருந்தவரையும், பின்னர் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட 2014-ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு எவ்வித தடையுமின்றி நடைபெற்றது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று, அந்த நீதிமன்றங்கள் அளித்த பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு நடைபெற்று இருக்கிறது.

ஆனால், அந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 7.5.2014 அன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் விளைவாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது.

கடந்த 7-5-2014 தேதியன்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட சில விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் 27–வது பாராவில் “ஜல்லிக்கட்டு விலங்குகளின் நலனுக்கு உகந்தது அல்ல. ஆகவே இது மிருக வதை தடுப்புச் சட்டத்தை மீறுகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.

பாரா 29-ல் “ஜல்லிக்கட்டு நடத்த மிருகவதை தடுப்புச் சட்டம் எந்த அனுமதியும் வழங்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரா 31-ல் “கண்காட்சி, கேளிக்கை, பொழுதுபோக்கு” போன்றவற்றிற்கு விலக்கு அளிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது.

பாரா 34-ல் “காளைகளை காட்சி பொருளாக கருதிட முடியாது” என்று கூறியிருக்கிறது.

பாரா 42-ல் “இப்போது நடைபெறுவது போன்ற ஜல்லிக்கட்டு எந்த காலத்திலும் தமிழகத்தின் கலாச்சாரமாகவோ பண்பாடாகவோ கடைப்பிடிக்கப் பட்டதில்லை” என்றே கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

எனவே, உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளால் இந்த சட்டத்திற்கு ஆபத்து வந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது.

இந்த சட்ட முன்வடிவினை முழு மனதோடு வரவேற்பதோடு;ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.

தமிழர்களின் கலாச்சாரமாகவும், பண்பாடாகவும் தொன்று தொட்டு இருந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு எந்த காலத்திலும் தடை வரக்கூடாது.

2009-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டு வந்த அந்தச் சட்டத்தினால்தான் 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எவ்வித தடையுமின்றி நடைபெற்றது என்பதை இந்த அவையில் அழுத்தத் திருத்தமாக பதிவு செய்திட விரும்புகிறேன்.

இந்த பிரச்சினை நம் பிரச்சினை - நம் மக்களின் பிரச்சினை - தமிழர்களின் ரத்தத்துடன் ஒன்றிப்போன பிரச்சினை.

இந்த சட்ட முன்வடிவை கொண்டு வருவதற்கு முன் திராவிட முன்னேற்றக் கழகம் கூறிய திருத்தங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் திருத்தங்களும், மேலும் வேறு எந்தத் திருத்தங்கள் வேண்டுமென்றாலும் அதற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் திறந்த மனதுடன் வரவேற்று ஆதரிக்கும் என்று கூறி அமைகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in