

நத்தம் விஸ்வநாதன், சைதை துரை சாமி மகன் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேம்பார் பட்டி கிராமத்தில் உள்ள அவரது பங்களா, அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நத்தத்தில் உள்ள கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள விஸ்வநாதன் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.
அதேபோல மதுரை மேலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும் அந்த மருத்துவமனை யின் நிறுவனர், துணைத் தலைவர், மேலாளர் ஆகியோரது வீடுகள், சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள கீர்த்தி லால் ஜூவல்லரி நகைக் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், சென்னை சேலையூர் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் பண்ணை வீட்டிலும், தி.நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத் தினர்.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40 இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் பல கோடி ரூபாய் ரொக்கம், நகைகள், சொத்துப் பத்திரங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோத னையின்போது கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், ஆவணங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வரு கிறது. ‘ஆய்வு முடிவு வெளியாக இன்னும் சில தினங்கள் ஆக லாம். தேவைப்பட்டால் சம்பந்தப் பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்துவோம்’ என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.