Last Updated : 14 Feb, 2014 12:00 AM

 

Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

4-வது ஆண்டாக வரிகள் இல்லாத தமிழக பட்ஜெட்: விவசாயம், கல்வி, மின்சாரத்துக்கு முக்கியத்துவம்

தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வரிகள் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுக்கு ரூ.242 கோடி, கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்வு, புதிதாக 100 அம்மா மருந்தகங்கள், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. கூவத்தை சுத்தப்படுத்த ரூ.3,830 கோடியில் பெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2014-15ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். முற்பகல் 11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அவர், பகல் 1.41 மணிக்கு முடித்தார். அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 4-வது முறையாக பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 4-வது ஆண்டாக வரிகள் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2014-15ம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.1.62 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக விவசாயம், கட்டமைப்பு மேம்பாடு, சாலை வசதி மற்றும் முதியோர், விதவைகள் ஓய்வூதியம், குழந்தைகள் மேம்பாடு ஆகிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டுறவு அமைப்புகளுக்கான பயிர்க்கடன் ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுக்கு ரூ.232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 766 கோடி அதிகமாகும்.

தமிழகம் முழுவதும் புதிதாக 100 அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. சாதி, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அரசின் சேவைகளை ஒரே இடத்தில் மக்கள் பெறும் வகையில் மேலும் 2000 பொது சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வரிகள், கட்டணங்கள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் செலுத்தும் வகையில் முதல்கட்டமாக சென்னையில் 10 இடங்களில் பொது சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக ஆயிரம் பஸ்கள் வாங்கப்படுகின்றன. மின் பற்றாக்குறையில் இருந்து தமிழகம் மீண்டுள்ள நிலையில், மின்துறைக்கு ரூ.10,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பசுமை மின் சக்தி வழித்தடம் அமைக்க ரூ.1593 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம்.

சென்னையில் கூவத்தை சுத்தப்படுத்துவதற்காக ரூ.3,830 கோடியில் பெரும்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்று வட்டச் சாலை அமைக்கப்படுகிறது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, வேலூர் மாவட்டங்களுக்கு ரூ.745 கோடியில் குடிநீர்த் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை பரிசோதனை செய்ய 770 நடமாடும் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்படும். மருத்துவத் துறைக்கான ஒதுக்கீடு, 7,005 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மானியத்துக்கான நிதி ரூ.4,900 கோடியில் இருந்து 5,300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:



2014-15ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.42,185 கோடி.



வீடு இல்லாத ஆதரவற்றோருக்காக 62 புதிய காப்பிடங்கள்.



காவல்துறைக்கு ரூ.5,186 கோடி ஒதுக்கீடு.



4,827 வி.ஏ.ஓ.க்கள், 300 சர்வேயர்களுக்கு லேப்டாப்.



பயிர்க் காப்பீட்டுக்கு ரூ.242 கோடி ஒதுக்கீடு.



கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்வு.



12 ஆயிரம் பேருக்கு கறவை மாடு; 1.5 லட்சம் பேருக்கு ஆடுகள்.



உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி.



புதிதாக 100 அம்மா மருந்தகங்கள்.



சென்னை சேத்துப்பட்டு ஏரியை புனரமைக்க கூடுதலாக ரூ.100 கோடி.



கூவத்தை சுத்தப்படுத்த ரூ.3,830 கோடியில் பெரும் திட்டம்.



மின் மானியம் ரூ.5,400 கோடி.



சென்னையில் பாலங்கள் ,சாலை, ரயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்ட 17 திட்டங்களுக்கு ரூ.2,000 கோடி .



ரூ.200 கோடியில் 1000 புதிய பஸ்கள்.



பசுமை திட்டத்தில் 60 ஆயிரம் வீடுகள்.



சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.500 கோடி; ஒருங்கிணைந்த நகர்ப்புற திட்டத்துக்கு ரூ.750 கோடி.



ரூ.100 கோடியில் 118 ஆரம்ப சுகாதார மையங்கள்.



தஞ்சை, நெல்லையில் ரூ.300 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை.



பள்ளிக் கல்விக்கு ரூ.17,730 கோடி; உயர் கல்விக்கு ரூ.3677 கோடி.



5.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.



இலவச மிக்சி, கிரைண்டர் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி.



மனவளர்ச்சி குன்றியோருக்கான உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x