Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் அவசியம்: முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

நீதிபதிகள் நியமனமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறையில் நீதிபதி பி.ராஜ கோபாலன் நினைவு அறக்கட்டளைச் சொற் பொழிவு செவ்வாய்கிழமை நடந்தது. இதில், ‘சட்டப் பணியில் தொழில் தர்மம்’, ‘முக்கிய பாதையில் நீதிபதிகள் நியமனங்கள்’ என்ற தலைப்புகளில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு உரையாற்றினார். அவர் கூறியதாவது:

வக்கீல்கள் மீது கிரிமினல் வழக்கு

தமிழகத்தில் 30 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களில் 1,200 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. வழக்கறிஞர் தொழிலில் ஏகபோக நிலை உள்ளது. மொத்த வழக்கறிஞர்களில் 20 சத வீதம் பேருக்கு வழக்குக்கு மேல் வழக்குகள் கிடைக்கின்றன. எஞ்சியுள்ள 80 சதவீதம் பேர் வழக்கு கிடைக்காமல் உள்ளனர். பலர் போதிய பயிற்சியின்றி இருக்கின்றனர்.

எளிதாக பட்டம்

இந்தியாவில் 900 சட்டக் கல்லூரிகள் உள்ளன. பல கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதி கிடையாது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு நேரடியாக தேர்வு எழுதி சட்டப் பட்டம் பெற்றுவிட முடியும். இத னால், பயிற்சி இல்லாத வழக்கறிஞர்கள் இத்துறையில் வருகிறார்கள்.

வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்ற பார் கவுன்சில் தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெறுகிறார்கள். பொதுவாக, பார் கவுன்சில் நிர்வாகிகள் மீது நல்ல மதிப்பு இல்லை.

மரியாதையை மீட்கவேண்டும்

உயர் நீதிமன்றம் ஆண்டுக்கு 200 நாட்கள்தான் இயங்குகிறது. அதில் 40 நாட்கள் வழக்கறிஞர்களின் போராட்டங்களால் பாதிக்கப்படுகிறது. வழக்கு சார்ந்த பணிகளை சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வழக்கறிஞர்களுக்கு ஒருகாலத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு அனுப்பப்பட்ட பட்டியல் ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இதுவரை இது போன்று நிகழ்ந்து இல்லை. நீதிபதிகள் நியமனத்தின் அடிப்படையே பலவீனமாக உள்ளது. தற்போது பின்பற்றப்பட்டு வரும் நீதிபதிகள் நியமன முறை திருப்திகரமாக இல்லை. இதில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம். நீதிபதிகள் நியமன ஆணையம்தான் (ஜுடிசியல் கமிஷன்) இதற்கு ஒரே தீர்வு.

இவ்வாறு நீதிபதி சந்துரு கூறினார்.

சந்துருவுக்கு பாராட்டு

முன்னதாக, சென்னை பல்கலைக்கழகத் தின் இந்திய வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன் வரவேற்றார். நீதிபதி பி.ராஜகோபாலனின் மகனும், மராட்டிய முன்னாள் டி.ஜி.பி.யுமான பார்த்தசாரதி பேசும்போது, ‘‘நீதிபதி சந்துரு தனது 7 ஆண்டு பணிக்காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித்து முடித்துவைத்திருப்பது வியப்புக்குரியது’’ என்றார்.

தமிழக முன்னாள் டி.ஜி.பி. வைகுந்த், முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி, பேராசிரியர்கள், வரலாற் றுத் துறை மாணவ, மாணவிகள், நீதிபதி ராஜகோபாலனின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x