Published : 29 Jul 2016 12:44 PM
Last Updated : 29 Jul 2016 12:44 PM

சபாநாயகர் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுகிறார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் சபாநாயகர் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இன்று காலை சட்டப்பேரவை கூடியது. பட்ஜெட் மீதான 4 நாள் விவாதம் முடிந்து, அமைச்சர் பதிலுரை வழங்கும் நாள் என்பதால், அமைச்சர் உரைக்கு முன்பாக, கடந்த திமுக ஆட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய கருத்துக்களை அவைகுறிப்பிலிருந்து நீக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

என்னை யாரும் உடனடியாக தீர்ப்பு வழங்க கட்டாயப்படுத்த முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இதையடுத்து இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதே கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''சட்டப்பேரவையில் சபாநாயகர் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதால் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது வழக்கமான செய்தியாக அமைந்துவிடுகிறது. அதற்காக நாங்கள் வேதனைப்படுகிறோம்.

அவையை நடத்தக்கூடிய சபாநாயகரைப் பொறுத்தவரையில் அவருக்கு மதிப்பு தர வேண்டும். அவர் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்ற நிலையில் தான் எங்கள் கடமையை ஆற்றிக்கொண்டு இருக்கிறோம்.

நேற்றைய தினம் திமுக துணைத் தலைவர் துரைமுருகன் நிதி நிலை அறிக்கை மீது உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சட்டம் ஒழுங்கு குறித்து சில புள்ளிவிவரங்களை எடுத்துச் சொன்னார். அப்படி அவர் எடுத்துச் சொல்லும்போது அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் சில விளக்கங்களை எடுத்துக்கூறியதோடு, 'நேரம் ஆகிவிட்டது. அடுத்த பிரச்சினைக்கு செல்லுங்கள்' என கூறினார்.

அந்த அடிப்படையில் துணைத்தலைவர் துரைமுருகன் வேறு பிரச்சினைக்கு போய்விட்டார்.இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச முன்வந்தார். புதிய பிரச்சினை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தால் ஏற்கெனவே பேசி முடித்த, அவை முன்னவர் பதில் சொல்லி முடித்தவுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைப் பேசினார். அப்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என சொல்லி, திருவாரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் நடந்த கொலை என பல செய்திகளை பதிவு செய்யத் தொடங்கினார்.

அவை அனைத்தும் நீதிமன்ற வழக்குகளாக உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது இங்கு பேசுவது மரபாகாது என்று நாங்கள் சொன்னோம்.

நீதிமன்றத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

உடனே நாங்கள் எல்லாம் எழுந்து, பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அப்பீலில் உள்ளது. அதைப் பற்றி பேசலாமா? என்று கேட்டதற்கு, சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடுகிறார்.

இத்தனைக்கும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு என்றோ, ரூ.100 கோடி அபராதம் குறித்தோ குறிப்பிட்டுப் பேசவில்லை. இப்படி இருக்கையில் அதை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது என்ன நியாயம்?

துரைமுருகன் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதை ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பினோம். வாதாடினோம், போராடினோம். ஆனால், கடைசிவரையில் சபாநாயகர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

மீண்டும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கும் கோரிக்கையை திமுக சார்பில் சபாநாயகரிடம் முன்வைத்தோம். 'நான் படித்துப் பார்க்கிறேன் பொறுங்கள்' என்று அதைத் தட்டிக்கழிக்கிறார்.

அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையிலிருந்து எழுந்து போய் சபாநாயகரிடம், அதை நீக்கிவிடுங்கள். பிரச்சினை முடிந்துவிடும் என்கிறார். ஆனால், சபாநாயகர் நீக்கவில்லை.

அப்போது துரைமுருகன் அருமையான யோசனை கூறினார். 'நான் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதால் அது செய்தியாக ஊடகங்களில் வராது. ஆனால், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை நீக்காவிட்டால் ஊடகங்களில் செய்தியாக வந்துவிடும்' என்றார்.

அதை சபாநாயகர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, இப்பிரச்சினையில் நான் முடிவு அறிவிக்கும் வரை அமைச்சர் பேசியதை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்றார். மேலும், இன்று தீர்ப்பு தருவதாக கூறினார்.

இன்று நல்ல தீர்ப்பை வழங்குங்கள் என்று நாங்கள் சொன்னோம். 'என்னை கட்டாயப்படுத்த முடியாது. வழங்குவேன்' என்று மட்டும் சொன்னார். எப்போது என்று சொல்லவில்லை.

அமைச்சர் உரை தொடங்குவதற்கு முன் தீர்ப்பை வழங்காவிட்டால், நாங்கள் புறக்கணிக்கும் அவசியம் ஏற்படும் என்று சொன்னேன். ஆனால், எந்த பதிலும் அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x