

கன்னியாகுமரி அருகே நிலைக் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அருகே உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஞாயிற்றுக்கிழமையன்று கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ளது. இது, மேலும் மேற்கு நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் குறிப்பாக சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கண்டிப்பாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் அதிக இடங்களிலும் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 10செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் கன்னியாகுமரியில் 9 செ.மீ மழையும், சாத்தான்குளம், மற்றும் சேரன்மகாதேவியில் 8 செ.மீ மழையும், திருச்செந்தூர் மற்றும் பாப்பனாசத்தில் 7செ.மீ மழையும் பெய்துள்ளது.
வட கிழக்கு பருவ மழையால் சராசரியை விட குறைவாகவே அக்டோபர் மாதம் மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாதம் தொடக்கத்திலேயே 10.செ.மீ வரை மழை பெய்திருப்பதும் மேலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதும் அக்டோபர் மாத பற்றாக்குறையை சமன் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமை காலையும் பல இடங்களில் நல்ல மழை பெய்து சென்னையை குளிர்வித்துள்ளது.
கோடம்பாக்கம், வடபழனி, அடையார், கிண்டி, நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் 23.5மி.மீ மழையும், விமான நிலையத்தில் 10.6மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. குமரியில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நகரத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.