Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

பிளஸ் 1 தேர்வை மார்ச் 31-க்குள் முடிக்க உத்தரவு: திருவள்ளூர், காஞ்சி உள்பட பல மாவட்டங்களில் இன்று தொடக்கம்

பிளஸ்-1 ஆண்டு தேர்வை மார்ச் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட பெரும்பாலான மாவட்டங் களில் பிளஸ்-1 தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தொடங்குகிறது.

(நேற்றைய இதழில் பிளஸ்-1 ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது சரியான தகவல் அல்ல).

பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மார்ச் 26-ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 6,7, 8, 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ல் தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 தேர்வு மாவட்ட அளவில் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப நடத்தி முடிக்கப்படும்.

தமிழகத்தில் ஏப்ரல் 24-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்தப்படுவதால் பிளஸ்-1 தேர்வை மார்ச் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

31-க்குள் முடிக்க உத்தரவு

பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது: பிளஸ்-1 தேர்வை மார்ச் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பிளஸ்-1தேர்வை முடித்தால்தான் மேல்நிலைக் கல்வி ஆசிரியர்கள் பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட முடியும்.

இன்று ஆரம்பம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) தொடங்குகிறது என்று தெரிவித்தார்.

சென்னை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு கடந்த 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடைய உள்ளதாக முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன் கூறினார்.

தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ல் தேர்வு

தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடுநிலைப் பள்ளிகளில் மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 21,22,26,28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும். 30-ம் தேதி பள்ளி வேலை நாள். மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x