சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை: மன அழுத்தமே காரணம்

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் தற்கொலை: மன அழுத்தமே காரணம்
Updated on
1 min read

தரமணியில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்த கேரளத்தைச் சேர்ந்த பெண், மன அழுத்தம் காரணமாக 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை தரமணியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ரேஷ்மா (24), மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். புதன்கிழமை இரவு தான் பணியாற்றிய நிறுவனத்தின் 10-வது மாடியில் இருந்த கேன்டீனுக்கு சென்ற ரேஷ்மா, திடீரென அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தரமணி காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதிக மன அழுத்தமே தற்கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "ரேஷ்மா கேரளத்தைச் சேர்ந்தவர். ரேஷ்மா தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் இல்லை என்று உறுதியாக கூறினர். அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, ரேஷ்மா எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் அதிக வேலைப் பளுவால் தற்கொலை செய்கிறேன் என்று எழுதி இருந்தார். பெற்றோரிடம் செல்போனில் பேசும்போதும் அதிக வேலை இருக்கிறது என்று பலமுறை கூறியிருக்கிறார். எனவே, அதிக வேலையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் அவர் தற்கொலை செய்திருக்கிறார்' என்றனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பணி செய்பவர்களில் 27 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஐ.டி. பணியால் ஏற்பட்ட அதிக மன அழுத்தத்தால் தற்கொலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை தடுப்பிற்கான 'சிநேகா' என்ற தொண்டு நிறுவன அதிகாரி சங்கர் கூறும்போது, "அதிக சம்பளமும், ஆடம்பர பொருட்களும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை ஐ.டி. இளைஞர்கள் உணர வேண்டும். போராடும் குணமும், தன்னம்பிக்கையும் ஐ.டி. இளைஞர்கள் பலரிடம் இருப்பதில்லை. கணினி விளையாட்டுகளை அதிகமாக விளையாடும் இளைஞர்கள் அதில் தோல்வி அடையும் நிலை வரும்போது சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். ஆனால் வெளியில் வந்து சக மாணவர்களுடன் விளையாடும்போதுதான் தோல்வி, சகிப்புத் தன்மையை அவர்கள் புரிந்து கொள்ள முடியும். இதேப் போல ஐ.டி. வேலையில் இருப்பவர்கள் தொழிலை தாண்டி மனம் விட்டு பேசும் வகையில் நல்ல நண்பர்களையும், உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வது நல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 044-24640050 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் பேசலாம். இது முற்றிலும் இலவச சேவை. பேசுபவரின் பெயர் விவரங்களைக் கூட தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in