Last Updated : 08 Jan, 2015 09:19 AM

 

Published : 08 Jan 2015 09:19 AM
Last Updated : 08 Jan 2015 09:19 AM

ஏப்ரலுக்குள் விண்ணப்பங்கள் விநியோகித்தால் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் எச்சரிக்கை

ஏப்ரல் 4-ம் தேதிக்கு முன் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை விநியோகிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் ஆர்.பிச்சை தெரிவித்துள்ளார்.

கல்வி உரிமைச் சட்டம் அமலில் இருப்பதை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டுமென மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி வருகிறது. இது தொடர் பாக கடந்த டிசம்பர் 23-ம் தேதியிட்ட அரசு சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானது. மேலும் மண்டல வாரியான கூட்டத்திலும் பள்ளி நிர்வாகங்களிடமும் இது குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொளத்தூர் சீனிவாசா நகரில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஜனவரி 7-ம் தேதி விண்ணப்பங்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து, முந்தைய நாள் காலை முதலே பெற்றோர்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். குடும்பத்தார் ஒருவர் மாற்றி ஒருவராகக் காத்திருந்தனர்.

இதுகுறித்து விசாரிக்க பள்ளிக்கு நேரில் சென்ற 'தி இந்து' செய்தியாளரை அனுமதிக்க மறுத்த காவலாளி, “பள்ளி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வாங்க பெயர் பதிவு செய்து வரிசையில் தான் வர வேண்டும். முதலில் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 மட்டும் கேட்பார்கள். நுழைவுத் தேர்வுக்குப் பின், பள்ளிக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும். 9.30 மணிக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும்” என்றார்.

அரசின் அறிவிப்புக்கு மாறாக விண்ணப்பங்கள் வழங்கும் நடவடிக்கை குறித்து பள்ளி தாளாளரிடம் கேட்டபோது, “நாங்கள் பள்ளி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை விநியோகிக்க வில்லை. எங்கள் பள்ளியில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்க விரும்புகிறார்கள் என்று தெரிந்து

கொள்ள ஆய்வு நடத்துகிறோம். இப்போது பெற்றோரிடம் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை மட்டும் பெற்றுக்கொள்கிறோம். அவர்கள் காத்திருப்புக்கு மதிப்பளிக்கும் விதத்தில், மாணவர் சேர்க்கை தொடங்கும்போது குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்வோம்” என்றார். இது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் ஆர்.பிச்சை கூறும்போது, “கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவே சேர்க்கை விண்ணப்பங்களை முன் கூட்டியே விநியோகிக்கக் கூடாது என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தது. ஏப்ரல் மாதத்துக்கு முன் விண்ணப்பங்களை விநியோகிக்கும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இதுவரை ஒரு பள்ளி மீது மட்டும்தான் அத்தகைய புகார் வந்துள்ளது. மேற்கண்ட பள்ளியில் விண்ணப்ப விநியோகம் செய்யக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தோம். அதிகாரிகள் மீண்டும் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்கள்” என்றார்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் முன்கூட்டியே விண்ணப்பங்கள் விநியோகிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்ட தலைமைக் கல்வி அலுவலரிடம் நேரில்புகார் அளிக்கலாம். அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கலாம். சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்க விரும்புவோர் 9840335518 என்ற எண்ணில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x