

சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது. சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்.பி. பூங்கோதை ஆலடி அருணா இல்லத் திருமண விழாவில் பேசிய கருணாநிதி, "இந்தியாவிலே எங்கோ ஒரு மூலையில் நம்முடைய மொழியை, நம்முடைய மொழிக் கொள்கையை வாட்டி வதைக்கின்ற அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மீண்டும் தமிழ்நாட்டில், இந்தியாவில் சமஸ்கிருதம் தலைதூக்குமா? வடமொழி நம்மீது படையெடுக்குமா என்ற அந்தக் கேள்விக் குறி நமக்கு ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
வட மொழிக்கு ஆதிக்கம், சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழி தான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ்கிருதத்தை பாட மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
வடமொழி எப்படி எல்லாம் ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சிக்காரர்களின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே தான் நான் கூறுகிறேன். சோம சுந்தர பாரதியார் சொல்வார் - 'சமஸ்கிருதம்' என்று கூடச் சொல்ல மாட்டார் - 'சஞ்சிகிரதம்' என்று தான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமஸ்கிருத மொழி, வட மொழி.
அந்த வடமொழிக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா என்ற கேள்வி பிறப்பதற்கு முன்பு, வடமொழியைத் திணிக்க விரும்புகின்ற மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு பெரும் கிளர்ச்சி எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவாயிற்றோ, அதைப் போல வட மொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி தமிழ்நாட்டில் உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது என்பதை நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.
ஏனென்றால் தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு இருந்த மூவேந்தர் காலந்தொட்டு இருந்து அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை, அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத் தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், கையில் தமிழன் ஒவ்வொருவரும் “சவுக்கை” எடுத்துக் கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும்.
இந்த மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொண்டால் தான், ஆலடி அருணா வீட்டுத் திருமணத்திலே கலந்து கொண்டதற்கு அடையாளம்.
அந்த அடையாளத்தை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு, மணமக்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.