

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனுக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று டிஜிபி அலுவலகத்தில் ஓ.பி.எஸ் அணியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருக வேல் மற்றும் வழக்கறிஞர்கள் நேற்று காலையில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில், மதுசூதனன் சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மதுசூதனன் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி.தினகரனை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். இதனால் எனக்கும், மற்ற நிர்வாகி களுக்கும் சசிகலா குடும்பத்தினர் மிரட்டல்கள் விடுக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் எனது வீட்டின் முன்பு, எனக்கு அறிமுகமில்லாத நபர்கள் சிலர் சுற்றித்திரிவதை பார்த்தேன். எனது வீட்டில் இருந்த ‘அம்மா பேரவை’ மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷிடம் இதுகுறித்த தகவலை தெரிவிக்க, அவர் உடனே வெளியே சென்று மர்ம நபர்கள் அருகே சென்று விசாரித்தார். அவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் ராஜேஷை சூழ்ந்துகொண்டு, ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரனை எதிர்த்து மதுசூதனன் போட்டியிடக் கூடாது. மீறி போட்டியிட்டால் கொலை செய்து விடுவோம்’’ என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். எனவே, எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்கும் விதத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
‘எனக்கும் கொலை மிரட்டல்கள் வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று மதுசூதனனுக்கு மாற்று வேட்பாளராக போட்டியிடும் அம்மா பேரவை வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் என்பவர் சார்பிலும் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் இதே மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.