சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரவை தலைவரின் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரவை தலைவரின் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Updated on
2 min read

சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் ப.தனபால் எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரு கிறது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா தரப்பினர் மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக அவரே பேட்டியளித்தார். அதன் பிறகு வி.கே.சசிகலாவை தமிழக முதல்வராக தேர்வு செய்வதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப் பட்டனர். சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார்.

கடந்த 18-ம் தேதி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்தப்பட்டது. கூவத் தூர் விடுதியில் அடைத்து வைக்கப் பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரவைக்கு அழைத்து வரப்பட்ட னர். அதிமுக எம்எல்ஏக்கள் சுதந்திரமாக, சுயசிந்தனையோடு வாக்களிக்க முடியாமல் பிணைக் கைதிகளைப்போல அழைத்து வரப்பட்டதால் எடப்பாடி பழனி சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்க வேண்டும் என்றும், அதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்தினால் மட்டுமே உண்மையான ஜனநாய கத்துக்கு வழிவகுக்கும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் ப.தன பாலிடம் திமுக, காங்கிரஸ் உள்ளி்ட்ட எதிர்க்கட்சியினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், எங்கள் கோரிக் கையை ஏற்காமல், எடப்பாடி பழனி சாமிக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் தன்னிச்சையாக செயல் பட்டார். இதனால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. சபைக் காவலர்கள் சீருடையில் அத்துமீறி உள்ளே வந்த போலீஸ் அதிகாரிகள் என்னையும், திமுக எம்எல்ஏக்களையும் தாக்கி வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதில் எனது சட்டை கிழிந்தது. எழும்பூர் திமுக எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்பிறகு எதிர்கட்சியினர் யாருமே இல்லாமல் நடந்த நம் பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். இது சட்டவிரோத மானது. அதிமுக எம்எல்ஏக்கள் சுதந்திரமாக, தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம் பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப் பேரவைத் தலைவர் அறிவித்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.

பிப்.18 அன்று சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அந்த நம் பிக்கை வாக்கெடுப்பு செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும். மேலும், எந்தவொரு எம்எல்ஏவை யும் வெளியேற்றாமல் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக ஆளுநரின் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து அவர்களது மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வும், அதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் ஸ்டாலின் கோரியுள்ளார்.

முன்னதாக, உயர் நீதிமன்றத் தில் நேற்று காலை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தனர். அப் போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதை இன்று மதியமே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதிகள், ‘‘முதலில் மனுவை தாக்கல் செய்யுங்கள். நாளை (இன்று) காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்’’ என்றனர். இதை யடுத்தே, ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in