

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளில் பார் அமைப்பதற்கு உரிமம் வழங்கும் வகையில் டாஸ்மாக் கடந்த மாதம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 4 வாரங்களுக்குள் புதிய டெண்டர் வெளியிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பார் அமைப்பதற்கு உரிமம் வழங்குவதற்காக டாஸ்மாக் நிர்வாகம் கடந்த மே மாதம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த டெண்டரை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள 200 பார் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:
மதுபானக் கடையுடன் பார் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் இந்தமுறை அதிக தொகை நிர்ணயித்துள்ளது. ‘காலி மதுபாட்டில்களை சேகரிக்கவும், பார் நடத்தவும் உரிமம் வழங்குவதற்கான டெண்டர் விதிமுறைகளை முறையாக வகுக்க வேண்டும். டாஸ்மாக் கடை விற்பனைக்கு ஏற்ப, பார் டெண்டர் தொகையை நிர்ணயிக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி, பார்களுக்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் தற்போது பிறப்பித்துள்ளது. இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட பார்களுக்கான டெண்டர் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 4 வாரங்களுக்குள் புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிடுமாறும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.