

`ஜி.கே.வாசனின் அரசியல் வாழ்க்கை சூன்யமாகிவிட்டது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் வேதனை தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜகவுக்கு ஜால்ரா தட்டும் பத்திரிகைகள் பல உள்ளன. காங்கிரஸை கேவலமாக எழுதும் பத்திரிகைகள் இன்னும் சில நாட்களில் எப்படி எழுத உள்ளனர் என்பதை பார்க்க உள்ளீர்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 சதவீதம் வாக்குகள் உள்ளதாக பத்திரிகைகள் சொல்லும் கணக்கு தவறானது.
13 சதவீத வாக்கு
தமிழகத்தில் 100-க்கு 10 சதவீதம் வாக்காளர்களே கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள். மீதம் உள்ள 90 சதவீத வாக்காளர்கள் தேர்தல் நேரத்தில் உள்ள நிலைகளைக் கருத்தில் கொண்டு வாக்கு அளிப்பவர்கள்.
மூப்பனாரும், வாழப்பாடி யாரும், ஜி.ஏ.வடிவேலுவும், ப.சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியில் இல்லாதபோது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 13 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் மீது மக்களுக்கு கோபம் இருந்தது. நமது வீட்டில் உள்ளவர்களே நமக்கு வாக்களிக்கவில்லை. இப்போது நிலைமை என்ன? காங்கிரஸ் தோற்றுவிட்டதே என்ற வருத்தம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மோடி பொய் பிரச்சாரம் வெளிப்பட்டிருக்கிறது.
மாநில கட்சிகளை ஒழிக்க
மோடி தனது கட்சி தலைவர் களை ஒழித்து, கட்சியை கைப்பற்றி சர்வாதிகாரியானார். தற்போது, மாநில கட்சிகளை ஒழிக்க நினைக்கிறார். தமிழகத்தில் சில கட்சி தலைவர்கள் தங்களை பாஜக மதிக்கவில்லை என்று தெரிந்தும் அக் கட்சியுடன் இருக்கிறார்கள். இலங்கை அதிபருக்கு மோடி விருந்து கொடுத்தபோதே பாஜகவிலிருந்து வெளியே வந்திருக்க வேண்டாமா?
விடுதலைப்புலிகள் தீவிர வாதிகள் என்பதில் மாற்று கருத்தே எனக்கு இல்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில் தமிழர்களுக்கு தீமை களை தொடர்ந்து செய்துவரும் ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
தமிழர்களுக்கு ஆதரவு
‘தமிழர்களை காப்பாற்ற ஏன் உங்கள் ஆட்சி காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற கேள்வி எங்கள் மீது திரும்பும். ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் தீர்மானம் வந்தபோது ஆதரித்திருந்தோம்.
இப்போது இந்திய மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. அக்குடும்பத்தினருக்கு நூறோ, இருநூறோ கொடுப்பது எங்கள் வேலையில்லை. தூக்கில் இருந்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.
தமிழக மக்கள் காங்கிரஸை ஆதரிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து சில நந்திகளாக இருந்தவர்கள் போய்விட்டார்கள். அதற்காக வருத்தப்பட வேண்டிய தில்லை.
என்ன இருக்கிறது?
காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்ற ஜி.கே.மூப்பனார் மீண்டும் காங்கிரஸில் வந்து சேர்ந்தார். கட்சி தொடங்கும் அளவுக்கு ஜி.கே.வாசனுக்கு என்ன இருக்கிறது. அவருடன் இருக்கும் 4 பேர் `சின்ன ஐயா’ என்று கூறிவிட்டால் தனி கட்சி தொடங்குவதா?. காங்கிரஸ் கட்சியை விட்டுச் சென்றதால் அவரது அரசியல் வாழ்க்கை சூன்யாமாகிவிட்டது. அவர் மீதுள்ள பாசத்தால் இதை கூறுகிறேன். தமிழக காங்கிரஸ் கட்சியி லிருந்து செல்பவர்கள் சிலர். ஆனால் வருபவர்களோ பலர்’ என்றார் இளங்கோவன்.