

வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி அனைத்து விவசாயி கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அனைத்து விவசாயிகள் மற் றும் விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், எஸ்.குணசேகரன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநில மாக அறிவித்ததற்கு நன்றி தெரி வித்த அவர்கள், விவசாயிகள் பிரச் சினை தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பயிர் கருகியதை கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகி 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. அதனால் கருகிப் போன பாசன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465, நீண்டகால பயிர்களுக்கு ரூ.7,287, மானாவாரி பயிர்களுக்கு ரூ.3,000 என்பதை உற்பத்தி செலவுகளை ஈடுகட்டும் வகையில் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
அனைத்து விவசாயிகள் பெற் றுள்ள பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவதுடன், மாதம் 30 கிலோ அரிசி இலவசமாக வழங்க வேண்டும். வறட்சி காரணமாக தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணமடைந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், அவர்கள் பெற்றுள்ள கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
சமீபத்தில் பெய்த மழையால் தமிழகத்தின் சில பகுதிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழுகி பாதிக்கப்பட் டுள்ளன. அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.