Last Updated : 12 Apr, 2017 07:39 AM

 

Published : 12 Apr 2017 07:39 AM
Last Updated : 12 Apr 2017 07:39 AM

இஎஸ்ஐ, பிஎப் நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டம்: ஊழியர்கள் கடும் அதிருப்தி

இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழி லாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இஎஸ்ஐ, பிஎப் நிறுவனங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட 15 சமூக பாதுகாப்பு சட்டங்களை ஒருங்கிணைத்து புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், பிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும். இதில், குரூப்-ஏ பணியிடங்கள் மத்திய அரசு வாரியம் மூலமும், குரூப்-பி, சி, டி ஊழியர்கள் மாநில அரசு வாரியம் மூலமும் தேர்வு செய்யப்படுவர். மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள இந்த இரு வாரியமும் தேசிய கவுன்சிலின் கீழ் இயங்கும்.

இந்த மசோதாவை நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்து சட்டமாக இயற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுகுறித்து தற்போது பொதுமக்களிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது. இந்நிலையில், புதிய தொழிலாளர் கொள்கை மசோதாவுக்கு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழகம் மற்றும் புதுவைக்கான வருங்கால வைப்பு நிதி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.கிருபாகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல கொள்கையின் மூலம், இபிஎப், இஎஸ்ஐ நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக மாறி மாநில அரசின் கீழ் கொண்டு வரப்படும். குறிப்பாக, சந்தாதாரர்களிடம் இருந்து பிஎப் பணம் வசூலிப்பது, அவர்களுடைய ஆவணங்களை பாதுகாத்தல், அவர்களுக்கான சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட ஆறு வகையான பணிகள் தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 2 கோடி வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் கள் உள்ளனர். அவர்கள் செலுத்தும் பிஎப் தொகையை இந்த தனியார் ஏஜென்சிகள் வசூலித்து பராமரிக்க உள்ளன. தனியார் ஏஜென்சிகள் சந்தாதாரர்களின் பணத்தை எந்தளவுக்கு பத்திரமாக கையாளுவார்கள் என்பது கேள்விக்குறியாகிவிடும்.

உதாரணமாக, போக்குவரத்து துறை பிஎப் நிறுவனத்திடமிருந்து பிரிந்து சென்று தனது ஊழியர் களுக்கு பிஎப் தொகையை அந்த நிர்வாகமே வசூலிக்கத் தொடங்கியது. ஆனால், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சரியாக பராமரிக்கத் தெரியாததால் தற்போது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது.

மேலும், வருங்கால வைப்பு நிதி மத்திய, மாநில அரசின் வாரியத்தின் கீழ் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இதன்படி, அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசும், குரூப் பி, சி, டி ஊழியர் களை மாநில அரசும் நியமிக்கும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி வாரியத்துக்கு முதலமைச்சர் தலைவராக இருப்பார்.

இவ்வாறு பிரிக்கும் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. தமிழகத்தில் மாநில அரசு ஊழியர் களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக வும், கேரளாவில் ஓய்வு பெறும் வயது 56 ஆகவும் உள்ளது.

எனவே மத்திய அரசின் கீழ் உள்ள எங்கள் துறை மாநில அரசின் கீழ் வரும்போது ஊழியர்கள் ஓய்வு பெறுவது, பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இப்புதிய மசோதா மூலம் வீட்டில் ஒருவரை பணியமர்த்தினால் கூட அவர்களுக்கு அந்தக் குடும்பத் தலைவர் சமூக பாதுகாப்பு நிதி செலுத்த வேண்டும்.

இவ்வாறு கிருபாகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x