

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட மின்னாம்பள்ளி பகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரச்சாரத்தை துவக்கி வைத்துப் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசு மீது தாக்கு:
"அதிமுக ஆட்சிக்குப் பின் தமிழகத்தில் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது தான் மின்வெட்டுக்குக் காரணம். தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மின் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
மத்திய அரசும் அதற்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் திமுக-வும் தமிழக மக்களுக்கு எதிராக சதி செய்கின்றன. வஞ்சனை செய்பவர்களை அடையாளம் கண்டு மக்கள் தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். மத்திய அரசின் நெருக்கடிகளுக்கு பணியாததால் தான் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது" என்றார் ஜெயலலிதா.
திமுக மீது குற்றச்சாட்டு: "மின்வெட்டே இல்லை" என்று முதலமைச்சர் பெருமைபட்டார், சட்டப் பேரவையிலும் அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்த சில நாட்களிலேயே மின்வெட்டு மீண்டும் ஏற்பட்டு உள்ளதே என்று திமுக-வினர் குதர்க்கமாக பேசுகிறார்கள்.
இதிலிருந்து இந்த மின் பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல என்ற எண்ணமும், திமுக-வின் மறைமுக ஆலோசனையின் பேரில் மத்திய அரசு செய்யும் சதித் திட்டம் தானோ என்ற சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு அடி பணிய மறுக்கிறேன் என்பதால் என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியினால், கோபத்தினால், காங்கிரஸ் கட்சியும், தி.மு.க-வும் கைகோர்த்துக் கொண்டு இப்படி தமிழக மக்களை பழி வாங்குவது நியாயம் தானா என்பதே இப்போதைய விவாதமாக மக்கள் மத்தியில் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏற்காடு தொகுதி அதிமுக-வின் கோட்டை என்றும், இதுவரை அங்கு நடைபெற்ற 9 தேர்தல்களில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாலை சென்னை திரும்புகிறார்:
ஏற்காடு இடைத்தேர்தல் வரும் டிச. 4ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து சேலம் அயோத்தியாப்பட்டணம், பேளூர், மின்னாம்பள்ளி, வாழப்பாடி, உடையாப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி, வலசையூர் உள்பட ஒன்பது இடங்களில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் ஜெயலலிதா மாலை வரை பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார்.