ஜேஇஇ, நீட் பயிற்சி அளிப்பதாக கட்டாய வசூல்: தனியார் பள்ளிகள் மீது குற்றச்சாட்டு

ஜேஇஇ, நீட் பயிற்சி அளிப்பதாக கட்டாய வசூல்: தனியார் பள்ளிகள் மீது குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி, திருநெல்வேலி யில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படு கின்றன. திருநெல்வேலியில் உள்ள சில தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கு ஏற்கெனவே மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு மாணவர்கள் முதல் முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டனர்.

மத்திய தொழிற்கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வையும், மருத்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் தேர்வையும் எதிர்கொள்ளும் விதத்தில் மாணவர்களை தயார்படுத்த, சில தனியார் பள்ளிகள் அதிக ஊதியத்துக்கு ஆசிரியர்களை நியமித்துள்ளதாக கூறி, மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனாலும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் புகார் கொடுக்க பெற்றோர் தயங்குகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறும்போது,

“ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கு பல பள்ளிகள் அதிக சம்பளத்தில் தனியாக ஆசிரியர்களை நியமித்துள்ளன. இவர்களைக் கொண்டு நடத்தப்படும் சிறப்பு வகுப்பில் சேர வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து, ரூ.25 ஆயிரம் வரை கட்டாய வசூலில் பள்ளிகள் ஈடுபடுகின்றன. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கடன் வாங்கியாவது கூடுதல் கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” என்றனர்.

ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை

இதுகுறித்து, திருநெல்வேலி மண்டல மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான (பொறுப்பு) பாலாவிடம் கேட்டபோது, “மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், மெட்ரிக் பள்ளிகள் மீது மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம்.

இந்த புகார்களை விசாரிக்க தனியாக குழு உள்ளது. இந்தக்குழு, பள்ளிகளில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் புகாருடன் அளிக்கலாம். புகார் அளிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in