தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பாம்பனில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும், திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

கடந்த டிசம்பர் 29 அன்று பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் மீனவர்கள் 18 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

மேலும் மூன்று மாதங்களாக தமிழக மீனவர்கள் 256 பேர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர். மேலும் மீனவர்களின் 81 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீனவப் பிரச்சினை தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேஸ்வரம், பாம்பன், நாட்டுப் படகு மீனவர்களின் குடும்பங்களின் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகிறது என கூறி கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.

மீனவர்கள் பாரம்பரியமாக தாங்கள் மீன் பிடித்து வரும் கச்சத்தீவு பகுதிகளில் தொடந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டும் எனவும், இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாம்பன் கிராமத் தலைவர் சைமன் தலைமை தாங்கினார். பாம்பன் ஊராட்சிமன்றத் தலைவர் பேட்ரிக் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிரபராதி மீனவர்கள் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம், கடந்த இரண்ட வாரங்களாக இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை நான் சந்தித்தேன். இலங்ககை சிறைகளிலும் உள்ள தமிழக மீனவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மேலும், இலங்கை சிறைச்சாலை உணவு அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.மீனவப் பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் மீனவ பிரநிதிகளுக்கு வரவில்லை.

மேலும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 81 படகுகளை மீட்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகிறது. படகுகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் இலங்கை நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி தகுந்த ஆவணங்களை சமர்பித்தால் மாத்திரமே படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவிப்பது குறித்து அடுத்த கட்டத்திற்கு நகரும்.

அரச தரப்பில் சென்னையில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை குறித்து தமிழக மற்றும் இலங்கை மீனவப் பிரநிதிகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் தரப்படவில்லை, என்றார்.

பாம்பனில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும், திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in