

சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆம்புலன்ஸில் வந்த மூதாட்டி, ஓட்டுநர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரியை சேர்ந்த மூதாட்டி மேரி ஆர்ஷேன் (80). உடல்நலம் குன்றியிருந்த இவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரை நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியில் இருந்து ஆம்புலன்ஸில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
ஆம்புலன்ஸை ஜிம்மி கார்ட்டர் (41) என்பவர் ஓட்டினர். அவருக்கு உதவியாக முகப்பேரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் உடன் வந்தார். சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மூதாட்டி மேரி ஆர்ஷேன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜிம்மி கார்ட்டர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநருக்கு உதவியாக வந்த ஆனந்த் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயம் அடைந்த ஆனந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.