வங்கிக் கணக்கில் மண்ணெண்ணெய் மானியம் சாத்தியமற்றது: இளங்கோவன் காட்டம்

வங்கிக் கணக்கில் மண்ணெண்ணெய் மானியம் சாத்தியமற்றது: இளங்கோவன் காட்டம்
Updated on
2 min read

வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய்யை பயனாளிகள் வாங்க வேண்டும், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது நடைமுறை சாத்தியமில்லாத திட்டமாகும் என்று மத்திய அரசை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் மானியங்களை ஒழித்துக் கட்டுவதில் தீவிர முனைப்பு காட்டுகிற பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. கடந்த 2014-ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.5, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 50 பைசா என ஒவ்வொரு மாதமும் உயர்த்தினால் மானியங்களை காலப்போக்கில் முற்றிலும் ஒழித்துவிட முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு அதிகரித்த காரணத்தால் அந்த நடவடிக்கையை தொடராத பாஜக அரசு இன்றைக்கு பொது விநியோக திட்டத்தின்கீழ் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதேபோல ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வெளிச்சந்தையில் ரூ.43 விலையில் விற்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் பொது விநியோக திட்டத்தின்கீழ் ரூ.12 விலையில் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு லிட்டரில் ரூ.31 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக மண்ணெண்ணெய் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டாலும் கிராமப்புறங்களில் குடிசைகளிலும், மலைப்பகுதிகளிலும் வாழ்கிற ஏழைஎளிய மக்கள் இன்றைக்கும் எரிபொருளாக பயன்படுத்திக் கொண்டுதான் வருகின்றனர். இவ்வகையில் ஆண்டுதோறும் 86.85 லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கி வருகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்தின்படி வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய்யை பயனாளிகள் வாங்க வேண்டும், அதற்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது நடைமுறை சாத்தியமில்லாத திட்டமாகும். மேலும் மண்ணெண்ணெய் விற்பனை செய்பவர்கள் தனியார்துறையை சேர்ந்தவர்களே தவிர பொதுத்துறை நிறுவனங்கள் அல்ல. பொதுவாக மண்ணெண்ணெய்யை பயன்படுத்துகிற பயனாளிகள் வங்கிகள் இருக்கும் இடத்திற்கு மிகத் தொலைவில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்களாக இருப்பதை இந்த அரசு அறிந்து கொள்ளாமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த நடைமுறையோடு ஒத்துப்போவதற்கு பயனாளிகளால் சாத்தியமில்லாத போது இத்திட்டத்தை அவர்கள்மீது திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியமாக ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடி வழங்கிவந்த நேரத்தில் கூட மண்ணெண்ணெய் விலையை உயர்த்துகிற முயற்சியில் ஈடுபட்டதில்லை. ஆனால் 2014 இல் சர்வதேச சந்தையில் 140 டாலராக இருந்த கச்சா எண்ணெய் 35 டாலராக கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில் மானியங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கிக் கொள்வதும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிப்படுத்துகிறது" என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in