Last Updated : 03 Jun, 2017 10:45 AM

 

Published : 03 Jun 2017 10:45 AM
Last Updated : 03 Jun 2017 10:45 AM

பிஎஸ் 3 வாகனங்கள் பதிவுக்கு ஜூலை 15 கெடு: பிஎஸ் 4 வாகனங்கள் பதிவு தாமதத்தால் மக்கள் அவதி

தமிழகத்தில் பிஎஸ் 3 வாகனப் பதிவு குளறுபடி நீடிப்பதால் புதிதாக வாங்கும் பிஎஸ் 4 வாகனங்களை பதிவு செய்ய பத்து நாட்களுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் புதிய வாகனங்களை ஓட்ட முடியாமல் வீடுகளில் பத்திரப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க சுற்றுச்சூழல் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று பிஎஸ் 3 தொழில்நுட்ப வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் மாதம் தடை விதித்தது. மேலும் மே 1-ம் தேதி முதல் பிஎஸ் 3 வாகனங்கள் தயாரிக்க, விற்க, பதிவு செய்ய தடை விதிக்கப் பட்டது.

இந்த உத்தரவால் விற்கப்படாமல் இருந்த 8 லட்சத்துக்கும் அதிகமான பிஎஸ் 3 வாகனங்கள் மார்ச் 31-க்குள் விலையை குறைத்து விற்பனை செய்யப்பட்டன. மார்ச் 31-க்குள் விற்கப்பட்ட பிஎஸ் 3 வாகனங்கள் அடுத்தடுத்த நாட்களில் பதிவு செய்யப்பட்டன. மார்ச் 31-க்குள் விற்கப்பட்டாலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக இணையதளத்தில் பதிவு செய்யப்படாத பிஎஸ் 3 வாகனங்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பிஎஸ் 3 வாகனங்கள் ஒரு மாதமாக பதிவு நடைபெறவில்லை.

இந்நிலையில் பிஎஸ் 3 வாகனங்களைப் பதிவு செய்ய மாநில போக்குவரத்து ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கினார். மேலும் பிஎஸ் 3 வாகனங்கள் பதிவை ஜூன் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனப் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பிஎஸ் 3 வாகனப் பதிவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எனவே புதிய பிஎஸ் 4 வாகனப் பதிவு தாமதமாகி வருகிறது. முன்பு புதிய வாகனம் வாங்கினால் மறுநாள் அல்லது வாகனம் வாங்கியவர் விரும்பும் நாளில் பதிவு நடைபெறுவது வழக்கம். தற்போது வாகனப் பதிவுக்கு 10 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் புதிய வாகனத்தை பல நாட்கள் வீடுகளில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாகன விற்பனை பிரதிநிதி ஒருவர் கூறியது:

பிஎஸ் 3 வாகனப் பதிவு சிக்கல் இன்னும் நீங்கவில்லை. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு தாமதம் ஆகிறது. பொதுவாகப் பதிவுக்கு முன்பு வாகனத்தை குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ஓட்டக்கூடாது. ஆனால் தற்போது பதிவுக்கு பத்து நாட்களுக்கு மேலாவதால் அந்த நாட்களில் வாகனத்தை ஓட்டினாலும் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடுகிறது என்பது தெரியாமல் இருக்க மீட்டரை ஆப் செய்து வழங்குகிறோம். பதிவுக்கு பின்னர் மீட்டர் ஆன் செய்யப்படும் என்றார்.

இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது:

வாகனப் பதிவை பொறுத்த வரை விற்பனையாளர்கள் வட்டா ரப் போக்குவரத்து அலுவலக இணையதளத்தில் வாகனம் வாங்கியவர்களின் பெயர் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பம் 21-ஐ பூர்த்தி செய்து பதிவுக்கு ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் விண்ணப்பம் 20-ஐ பூர்த்தி செய்து பதிவுக்கு விண்ணப்பித்து, இணைய வங்கி சேவையில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். மறுநாள் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் வாகனத்தை காண்பித்து பதிவு செய்யலாம். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுவரப்படும் வாகனங்கள் அன்றைக்கே பதிவு செய்து கொடுக்கப்படுகின்றன. வாகனப் பதிவு தாமதத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காரணம் அல்ல என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x