Published : 07 Jan 2014 08:09 PM
Last Updated : 07 Jan 2014 08:09 PM

தருமபுரி: குடிநீர்த் தொட்டிகளில் தொடர்ந்து விஷம் கலப்பு
அதிர்ச்சியில் மக்கள்

தருமபுரி மாவட்டத்தில் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு குடிநீராதாரங்கள் மற்றும் கட்டமைப்புகளில் மர்ம நபர்கள் விஷம் கலந்தனர். இதைத் தடுப்பதற்காக ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, குடிநீர்க் கட்டமைப்புகளைப் பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், சில இடங்களில் தண்ணீர்த் தொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் நிலவி யது தெரிய வந்தது. இதுகுறித்து ஜனவரி 2-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது. இதற்கிடையில், மீண்டும் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர் கைவரிசை

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பையர்நத்தம் பகுதியில், சிறிய மலை மீது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. சுமார் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்ட நீர் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து 18 ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட சிறிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் அனுப்பப்பட்டு, 140-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பலனடைகின்றனர்.

இந்தத் தொட்டியின் ஆபரேட்டராகப் பணிபுரியும் அன்பழகன், தொட்டியின்கீழே அமைக்கப்பட்டுள்ள அறையில் இரவில் தங்கி, காவல் பணியிலும் ஈடுபடுவார். இதேபோல், ஞாயிற்றுக்கிழமை இரவும் தொட்டியின் கீழே உள்ள அறையில் உறங்கியுள்ளோர். நள்ளிரவில் ஏதோ ஓசை கேட்டு வெளியில் வந்த அன்பழகன்,

மர்ம நபர் ஒருவர் குடிநீர்த் தொட்டியின் ஏணியில் இருந்து இறங்கியதைப் பார்த்துள்ளார். உடனே அன்பழகன் கூச்சலிடவே, அந்த நபர் அங்கிருந்து ஓடி, மலையடிவாரத்தில் நின்ற காரில் ஏறித் தப்பியுள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு

இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், தொட்டியில் உள்ள நீரை ஆய்வு செய்தனர். விவசாயப் பயிர்களில் வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ‘குருணை’ என்ற வீரியமிக்க விஷமருந்து தண்ணீரில் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அங்கு வந்து, விசாரணை நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்த நபரை, காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு கும்பலே இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இதேபோல் மற்ற குடிநீர்த் தொட்டிகளிலும் விஷம் கலக்கத் திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

சுத்தப்படுத்தும் பணி

குடிநீர்த் தொட்டியில் உள்ள நீர், ஆய்வுக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொட்டி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னரே மீண்டும் தண்ணீர் நிரப்பப்படும். அந்த நீரும் ஆய்வு செய்த பின்னரே, மக்கள் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என ஊராட்சிகள் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

குடிநீர்த் தொட்டிகளில் விஷம் கலக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதால், தருமபுரி மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x