

மக்களின் மனநிலை மாற வேண்டும் என, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் உருக்கமாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
போலீஸ் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பு தர முடியாது. அதனால் தேவைப்படும் நேரத்தில் பொதுமக்களே அடுத்தவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
எனது மகளை கொலை செய்யும்போது, அங்கு இருந்த பயணிகள் அனைவரும் வாய்மூடி அமைதியாக இருந்துவிட்டனர். இதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. உங்களுடைய தாய் அல்லது சகோதரிக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா?. மக்களின் மனநிலை மாற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காவல் ஆணையர் ஆலோசனை
இதற்கிடையே, போலீஸ் அதிகாரிகளுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சென்னை மாநகர ஆணையர் டி.கே.ராஜேந்திரன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த ஆணையர் டி.கே.ராஜேந்திரன், “குற்றவாளியை பிடிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ரயில்வே போலீஸாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குற்றவாளியை விரைவில் பிடித்துவிடோம். சுவாதியின் குடும்பத்தினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்” என்றார்.