Last Updated : 21 Dec, 2013 09:45 PM

 

Published : 21 Dec 2013 09:45 PM
Last Updated : 21 Dec 2013 09:45 PM

நெல்லை மாவட்டத்தை ‘மிரட்டும்’ வறட்சி: மழை குறைவு, நெல் சாகுபடி சரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில், வழக்கமான மழை அளவைவிட இவ்வாண்டு, 12.6 சதவிகிதம் குறைந்துள்ளதால், மீண்டும் வறட்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவத்துக்கும், காலத்துக்கும் ஏற்ப மழை கிடைக்காததால், சாகுபடி பரப்பு சரிவடைந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில், வழக்கமாக நெல் முதல்போகமான கார் பருவத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை, 20 ஆயிரம் ஹெக்டேரிலும், 2-ம் போகத்தில், அக்டோபர் முதல் பிப்ரவரி வரையில், 62 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி நடக்கிறது. கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால், சாகுபடி பரப்பு குறைந்து, 41,967 ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது.

நெல் சாகுபடி சரிவு

நெல் மட்டுமின்றி, பிசான பருவத்தில் பயிரிடப்படும் மற்ற பயிர்களின் பரப்பும் பெருமளவில் குறைந்திருந்தன. கடந்த 2011-12-ம் ஆண்டில், 70,407 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், 2012-13-ம் ஆண்டில், 38,246 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி நடைபெற்றது.

நீண்ட இடைவெளிக்குப்பின் 2012-13-ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியது. இவ்வாண்டிலும், மாவட்டம் வறட்சியை எதிர்நோக்கியிருப்பது குறித்து, திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரி மழையளவு, 814.8 மி.மீ. 2012-ம் ஆண்டில் பெறப்பட்ட மழையளவு 754.39 மி.மீ. இது இயல்பான மழை அளவைவிட, 7 சதவீகிதம் குறைவு. இவ்வாண்டு இதுவரை, 711.83 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழையை விட 12.6 சதவிகிதம் குறைவு.

1,731 குளங்கள் வறட்சி

பருவத்துக்கும், காலத்துக்கும் ஏற்ப மழை கிடைக்காமல், நீர் ஆதாரங்கள், குளங்கள வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அணைகளில், 41 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 25 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.

மாவட்டத்தில் மொத்தம், 921 கால்வரத்து குளங்களும், 1,528 மானாவாரி குளங்களும் உள்ளன. இவற்றில், 406 கால்வரத்து குளங்களும், 1,325 மானாவாரி குளங்களும் தற்போது வறண்டிருக்கின்றன. நிலத்தடி நீர் ஆதாரத்தை பொறுத்த வரை கிணறுகளில் சராசரியாக, 3 முதல் 6 மணிநேரம் பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. மாவட்டத்தில் போதிய மழையில்லாததால், பிசான சாகுபடியில் திட்டமிட்ட இலக்கை எட்ட முடியாத நிலையுள்ளது.

கலக்கத்தில் விவசாயிகள்

மாவட்டத்தில், 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெல் விவசாயத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடந்த 30.11.13-ம் தேதி வரை 24,928 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 25,849 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2011-ம் ஆண்டில் மாவட்டத்தில், 86,441 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அடுத்த ஆண்டில், 41,691 ஹெக்டேராக குறைந்தது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால், 38,246 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிரில், 3,563.74 ஹெக்டேர் பரப்புக்கு பாதிக்கப்பட்டது. இதுபோல், 35,432 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த இதர பயிர்கள் 13,401.76 ஹெக்டேர் பரப்பில் பாதிக்கப்பட்டது.

தவறி வரும் பருவ மழை, நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிப்பு, இயற்கை வளங்கள் கொள்ளை உள்ளிட்ட காரணங்களால், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு, ஆண்டு நெல் மற்றும் பிற பயிர்கள் சாகுபடி பரப்பு சரிவடைந்து வருவது விவசாயிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x