

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகரில் கழகத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், கட்டுப்பாட்டை மீறி சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டப்பட்டது பற்றிய செய்தி, தலைமைக் கழகத்தின் கவனத்துக்கு வந்தவுடன், திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், இச்செயலைக் கண்டித்து, தொடர்ந்து தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் விஷமத்தனமான சுவரொட்டிகள், மதுரையில் ஒட்டப்பட்டுள்ளதாக, தலைமைக் கழகத்துக்கு தகவல் வந்துள்ளது.
தலைவர் கருணாநிதியின் எச்சரிக்கையையும் மீறி, கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.எம்.மன்னன், பொதுக்குழு உறுப்பினர் சு.எழில்மாறன், முபாரக் மந்திரி, அன்பரசு இளங்கோ மற்றும் எம்.பாலாஜி ஆகியோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை முதல் கழக உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.