ஜன.25 முதல் இலவச வண்ண அடையாள அட்டை: 15 லட்சம் புதிய வாக்காளர்கள்

ஜன.25 முதல் இலவச வண்ண அடையாள அட்டை: 15 லட்சம் புதிய வாக்காளர்கள்
Updated on
2 min read

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

தமிழக வாக்காளர்கள் இறுதி பட் டியலில் புதிதாக 15.04 லட்சம் வாக் காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் வரைவு வாக் காளர் பட்டியல் கடந்த செப்டம்ப ரில் வெளியிடப்பட்டது. அதன்படி 5 கோடியே 81 லட்சத்து 51 ஆயிரத்து 729 வாக்காளர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி கள் தொடங்கின. புதிய வாக்காளர் கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற் றுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு, நேரடி கள ஆய்வு மூலம் தீர்வு காணப்பட்டது. தொடர்ந்து, 32 மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் தனித் தனியாக நேற்று வெளியிடப் பட்டது.

இதன்படி, தமிழகத்தில் தற் போது 5 கோடியே 92 லட்சத்து 71 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர். இதில் இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள் என 3 லட்சத்து 84 ஆயிரத்து 369 பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 15 லட்சத்து 4 ஆயிரத்து 233 பெயர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட வாக் காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியபோது, ‘‘புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 15.04 லட்சம் வாக்காளர்களுக்கு ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று வண்ண அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங் கும். இதற்கு தனியாக மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், புதிய வாக்காளர்களுக்கு அவர்கள் இணைத்துள்ள கைபேசி எண் ணுக்கு ரகசிய குறியீடு அனுப்பப் படும். அதை தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் காட்டி, வண்ண அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். முன்னதாகவே பெற விரும்புவோர் இ-சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.

5 மாநில தேர்தல்

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் பிப்ரவரி, மார்ச்சில் நடக்க உள்ளன. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதுகுறித்த ஆலோ சனைக் கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் சார்பு செயலாளர் தர், பிரிவு அலுவலர் பொன்முத்து, சிஸ்டம் அனலைசர் அசோக்குமார், உதவி பிரிவு அலுவலர் ஜெரோம் ஆகியோர் கொண்ட குழு டெல்லி செல்கிறது. தமிழக தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ரீதியான பணிகளை இக்குழு விவரிக்கிறது.

இது தவிர, 5 மாநிலங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக தமிழக பிரிவைச் சேர்ந்த சகாயம், ஜவகர், குமார் ஜெயந்த், உதயசந்திரன், ஹர்சகாய் மீனா உள்ளிட்ட 34 ஐஏஎஸ் அதிகாரிகள், 32 ஐஎப்எஸ் அதிகாரிகள் செல்கின்றனர். இவர்களுக்கு ஜனவரி 10-ம் தேதி டெல்லியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறைந்த செலவில் வெற்றி

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடந்தது. இதில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் செலவுக்கணக்கை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இதில் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி குறைந்த அளவே செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார். அவர் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்து 62 மட்டுமே செலவழித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் கே.சி.பழனிசாமி ரூ.19 லட்சத்து 20 ஆயிரத்து 976 செலவழித்துள்ளார்.

தஞ்சையில் அதிமுகவின் ரெங்கசாமி ரூ.18.94 லட்சம், திமுகவின் அஞ்சுகம் பூபதி ரூ.27.52 லட்சமும், திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் போஸ் ரூ.22.86 லட்சம், திமுகவின் சரவணன் ரூ.22.86 லட்சமும் செலவழித்துள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு கணக்கு அனுப்பியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.28 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி 30 நாட்களுக்குள் இந்த செலவுக்கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in