

தமிழகத்தில் உள்ள குவாரிகளின் செயல்பாடுகள் பற்றி ஆராய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் நியமித்தது. 2 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் கூறியது. சகாயம் நியமனத்தை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சகாயம் ஆய்வுக் குழுவுக்கு உதவும் வகையில், ‘கனிம வள முறைகேடு- சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த முகிலன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் கனிமவள முறைகேடுகள் குறித்து சகாயம் ஆய்வுக் குழு விசாரிக்கவுள்ளது. அந்த குழுவுக்குத் தேவையான தகவல்களை பெற்றுத்தரும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள சமூகச் செயல்பாட்டாளர்கள் சென்னை யில் கடந்த 31-ம் தேதி கூடிப் பேசினர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கனிமவள முறைகேடுகளைக் கண்டறிய உதவியாக, லஞ்ச-ஊழல் ஒழிப்புச் செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், ஆர்வமுள்ள தனிநபர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கவேண்டும்.
மாநிலம் முழுவதும் சகாயம் குழு பொது விசாரணை நடத்தவேண்டும். அரசின் அனுமதி பெற்ற இடங்கள், அனுமதி பெறாத இடங்கள் அனைத்தையும் ஆய்வுக்குழு நேரடியாகப் பார்வையிட வேண்டும். கனிமக் கொள்ளை அதிகம் நடந்துள்ள நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோர கிராமங்கள், மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு உட்பட்ட கிரானைட் குவாரி கிராமங்களில் ஆய்வுக்குழு நேரடியாக மக்களை சந்திக்க வேண்டும். கனிமவள முறைகேடுகளால் ஏற்பட்ட இழப்பை மதிப்பீடு செய்வதுடன், சுற்றுச்சூழல், உடல்நலம், குடிநீர் ஆதாரம், விவசாயம், மீன்வளம் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் ஆய்வு செய்யவேண்டும். முறைகேடு பற்றி தகவல் கூறுவோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சகாயம் குழுவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 18 பேரைக் கொண்ட அமைப்புக் குழு உருவாக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் முகிலன், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் செந்தில் ஆறுமுகம், ஆழி செந்தில்நாதன், நந்தகோபால், ஈரோடு சித்திரகலா, கடலூர் தமிழ் வேங்கை, விழுப்புரம் வேடியப்பன், கிருஷ்ணகிரி கிரானைட் கொள்ளை எதிர்ப்பு செயல்பாட்டாளர் வழக்கறிஞர் கென்னடி, திருச்சி தனலட்சுமி, மோகனூர் மணல்கொள்ளை எதிர்ப்பு செயல்பாட்டாளர் மதியழகன், நாமக்கல் வாசுதேவன், மதுரை கிரானைட் கொள்ளை எதிர்ப்பு செயல்பாட்டாளர் கரூர் சோமசுந்தரம், கூத்தன்குழி, நெல்லை தாது மணல் கொள்ளை எதிர்ப்பு செயல்பாட்டாளர் ஆண்டன், திருப்பூர் ஈஸ்வரன், நாமக்கல் செல்லப்பன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள் ளனர்.