

அடுத்த மாதம் நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக முதல்வரிடம் ஆதரவு கோருவோம் என்று தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்க (எஸ்ஆர்எம்யு) பொதுச் செயலாளர் என்.கண்ணையா கூறினார்.
ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இது மத்திய அரசால் திணிக்கப்பட்ட போராட்டம். இப்போராட்டம் வெற்றி பெற்றால் தொழிலாளர்களுக்கு நல்லது நடக்கும்.
ரயில்வேயில் அந்நிய முத லீட்டை அனுமதித்தால், டிக்கெட் கட்டணம் கடுமையாக உயரும். காலி பணியிடங்களை நிரப்ப மாட்டார்கள். ஏற்கெனவே போராடிப் பெற்ற பல உரிமைகளை தக்க வைத்துக்கொள்ளவே, இந்தப் போராட்டத்தை நடத்த உள்ளோம். எஸ்ஆர்எம்யு தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு, பிற மத்திய சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.
மேலும், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பிஹார், டெல்லி அரசுகளும் ஆதரவு அளித்துள்ளன. அதேபோல, கர்நாடக, கேரள, தமிழக அரசுகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்து, எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கேட்க உள்ளோம். பிற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, ஆதரவு கோர உள்ளோம் என்றார்.