

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த ஆண்டு மத்திய அர்சு அறிவித்தது. தமிழக மாணவர்களை பாதிக்கும் என்பதால் தமிழகத்திற்கு விதிவிலக்கு தரவேண்டும் என மாணவர் அமைப்புக்களும் அனைத்துப் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய அரசு கடந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு இல்லை என்று அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தின் மாணவர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது.
நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றால் தமிழகத்தின் மாணவர்கள் கடும் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசின் நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக தடைசெய்யும் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தமிழக அரசு உடனடியா நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.