Published : 01 Jun 2016 12:57 PM
Last Updated : 01 Jun 2016 12:57 PM

புதுச்சேரியில் சமூக விரோத செயல், ஊழல் புகார்களுக்கு 1031-ல் அழைக்கலாம்: கிரண்பேடி புதிய நடைமுறை

புதுச்சேரியில் சமூக விரோத செயல்கள், ஊழல், முறைகேடுகள்குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 1031 என்ற இலவச தொலைபேசி எண் ஒருவாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற கிரண்பேடி, மாநிலத்தில் குற்றங்கள் தடுப்பு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டங்களை தயாரிக்கும்படி ஐஜி பிரவீர் ரஞ்சனுக்கு உத்தரவிட்டார். இதன்படி காவல்துறை ஐஜி தலைமையிலான குழு வரைவு திட்டங்களை தயாரித்து வழங்கியுள்ளது. அதன் வெளியீட்டு விழா மற்றும் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்று இரவு கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்றார். வரைவுத் திட்டங்கள் தொடர்பாக ஐஜி பிரவீர் ரஞ்சன் நோக்கவுரை ஆற்றினார். வரைவுத் திட்டங்களை வெளியிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதாவது:

‘‘புதுச்சேரி மிகவும் அழகான அமைதியான மாநிலமாகும். இச்சிறிய யூனியன் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்கவில்லை என்றால் காவல்துறை தங்கள் பணிகளை செய்யவில்லை என்பது தான் பொருளாகும்.

குற்றங்களை தடுப்பதில் காவல்துறை மட்டும் தனித்து செயல்பட இயலாது. பொதுமக்கள் பங்களிப்பும் அவசியமாகும். இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் குற்றமில்லா நகராக புதுவையை உருவாக்க முடியும்.

புதுச்சேரியில் நடைபெறும் சமூகவிரோத செயல்கள், ஊழல், முறைகேடு, ரௌடிகள் குறித்த விவரங்கள் தொடர்பான புகார்களை பொது மக்கள் தெரிவிக்க காவல்துறை சார்பில் 1031 என்ற இலவச தொலைபேசி எண் இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும். அதாவது வரும் புதன்கிழமை முதல் இந்த தொலைபேசி எண் செயல்படும். புதுச்சேரியில் குற்றங்களை ,ஊழல், குறித்த தகவல்களை 1031 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

புகார்கள் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். துணை நிலை ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் என மூவருக்கும் மட்டும் தெரியும். தகவல் தெரிவிப்போர் விரும்பினால் மட்டுமே அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். மேலும் தகவல் உண்மையாக இருந்தால் உரிய வெகுமதியும் தரப்படும்.

வணிகவரி துறை ஆணையர் விற்பனையை வரியை வசூலிக்கும் பணியை துவங்கி விட்டார். மக்கள் தாங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் ரசீதை கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசிடம் புதுவை கடன் பெற்று தனது நிர்வாகத்தை நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை வட்டியாக செலுத்தி வருகிறோம். மத்திய அரசிடம் நிதி பெறாமல் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற அனைவரும் ஒத்துழையுங்கள்.

ஒரு வாரத்திற்குள் வணிகர்கள் தங்களது கணக்குகளை சரியாக்கி விடுங்கள். அரசு பள்ளிகள் மற்றும் அரசு துறைகளில் செயலர்கள், இயக்குநர்கள் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆசிரியர்கள் பணியில் உள்ளனரா என்பதை கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நல்ல அரசு ஊழியர்களை பாராட்ட இந்த நடவடிக்கை அவசியமாகும்.

ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படுவர். மேலும் ஒரு வாரத்திற்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நடைபாதைகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட இடங்களை வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து போலீசார் அகற்றுவார்கள். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சம்பவ இடத்திலேயே உடனடி அபராதம் வசூலிக்கப்படும்.

விஐபிக்களுக்காக போக்குவரத்து நிறுத்தப்படாது. எந்த விஐபிக்களுக்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாது. மேலும் வாகனங்களில் சைரன் ஒலியும் இருக்காது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தனி ஈ-மெயில் முகவரி அளிக்கப்படும். இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இதுதொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். அரசியல் குறுக்கீடு இருந்தால் அனுமதிக்க மாட்டோம். நல்லதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்காக மக்கள், தன்னார்வலர், நிபுணர்கள் ஆகியோர் கருத்தறியப்படும்.

புதுச்சேரி மக்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவிடப்படும் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராஜ்நிவாசில் பொதுமக்கள் துணை நிலை ஆளுநரை சந்திக்கலாம்.’’ என்றார். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு அவர்கள் அளித்த பதில்களும் பெறப்பட்டன. அவற்றை மேடையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாசித்து, உரிய வகையில் அவை செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x