

அடுக்குமாடியில் குடியிப்பவர்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்திருப்பதாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் குடியிருப்போர் நல சங்கத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை வானகரம் அருகே அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மென்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ‘லத்திகா டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். சில மாதங்களாக இந்தக் கடை பூட்டப்பட்டு உள்ளது. எந்த வியாபாரமும் நடக்கவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை மதுரவாயல் காவல் நிலையத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர். குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள், மதுரவாயல் காவல் நிலையத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் கொடுத்தனர்.
அடுக்குமாடிகளில் குடியிருப் பவர்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ளனர். அதை அகற்றக்கோரி டிசம்பர் வரை கெடு விதித்து அதன் உரிமையாளர் சீனிவாசனுக்கும் தகவல் கொடுத்தோம். அவர் கடையை அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம். எந்தப் பொருளையும் திருடவில்லை, சேதப்படுத்தவும் இல்லை. சீனிவாசன் தரப்பினர் எங்களை மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.