

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 94 மீனவர்கள் மற்றும் ரூ.40 கோடி மதிப்பிலான 71 படகுகளை, பொங்கல் பண்டிகைக்குள் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “இந்தியா - இலங்கை ஆகிய இரு தரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்குக் கடந்த காலங்களில் மூன்று முறை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு பதவி ஏற்ற பிறகு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவில்லை. உடனடியாக ஜனவரி மாதத்திலேயே 4-ம் கட்ட இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த இலங்கை அரசோடு இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை மீனவர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி மாநில, மாவட்ட மீனவ அமைப்புகள் ஆலோசித்து விரைவில் முடிவு எடுப்போம்.
தமிழகத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடிப் படகுகளைப் பிடித்து முடக்கி வைப்பதையும், இலங்கை அரசு தொடர்ச்சியாக செய்துவருகிறது. இந்திய அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பிடிபட்ட படகுகள் உட்பட 71 படகுகள் இலங்கை கடற்கரையில் மக்கி வீணாகி வருகின்றன. இதன் மதிப்பு ரூ.40 கோடி. புயல், மழை காரணமாக இவை பாதிக்கப்படுகின்றன. கடன் வாங்கித்தான் பலர் படகுகளை வாங்கியுள்ளனர். மேலும் 94 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த விஷயத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பதைப் பார்த்து மீனவர்கள் கோபத்தில் உள்ளனர். பொங்கலுக்குள் மீனவர்களையும், படகுகளையும், மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.