Published : 06 Feb 2017 08:47 AM
Last Updated : 06 Feb 2017 08:47 AM

தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு



அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராக சசிகலா பதவியேற்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரண மாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். இதையடுத்து, ஜெய லலிதா கவனித்து வந்த உள்துறை உள்ளிட்ட துறைகள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதை யடுத்து, அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருடன் ஜெயலலிதா அமைச் சரவையில் இருந்த அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பொதுச்செயலாளரான சசிகலா

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது பொதுச்செயலாளராக சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிந்தார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் டிசம் பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாள ராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கிடையே கட்சி, ஆட்சி நிர்வாகங்கள் இரண்டும் ஒருவ ரிடமே இருக்க வேண்டும். அதனால், முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகளும் அமைச்சர்களும் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர். ஆனால், சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பொங்கலுக்கு முன்னதாக அவர் முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாயின. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமானதால் அந்த முயற்சி தள்ளிப்போனது.

கடந்த ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதிக்குள் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்நிலையில், பிப்ரவரி 5-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என திடீரென அறிவிக்கப் பட்டது. எம்எல்ஏக்களுக்கு தொலை பேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக (முதல்வராக) சசிகலா தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் உடனடியாக முதல் வர் பதவியை ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாயின.

இதைத் தொடர்ந்து, நேற்று காலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்றனர். அங்கு, சசிகலாவுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இதில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிந்ததும் அமைச்சர்கள் அனைவரும் ராயப் பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்த னர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2.10 மணிக்கு வந்தார். 3.10 மணிக்கு சசிகலா வந்தார். அவரை தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

இதில், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து, சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. கூட்டம் முடிந்ததும் 3.40 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு சசிகலா திரும்பினார்.

சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட் டதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அந்தக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் 21-வது முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா, வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடக்கும் என்றும், இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியில் ஆளுநர்

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய் யப்பட்டது குறித்து கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் நேற்றிரவு திடீரென கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் மீண்டும் 7-ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார். அப்போது ஆளுநரை சந்திக்கும் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன்பின் ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x