Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

வேலூரில் 15 குடிசைகள் எரிந்து சாம்பல்: பட்டாசு வெடித்ததால் விபரீதம்

சிறுவர்கள் வெடித்த பட்டாசால் 15 குடிசைகள் எரிந்தன. இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

வேலூர் காகிதபட்டரை சாரதிநகர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணியளவில் சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு தீப்பொறி அங்குள்ள குடிசை வீடு மீது பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அங்கிருந்த அனைத்து குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது.

இந்த தகவல் கிடைத்ததும் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வருவதற்குள் பாதிக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்துவிட்டன. லாரியில் கொண்டு வந்த தண்ணீரும் காலியானதால் காட்பாடி பகுதியில் இருந்து தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 1 மணி நேரத்திற்குள் அங்கிருந்த 15 குடிசைகள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேயர் கார்த்தியாயினி, வேலூர் எம்எல்ஏ விஜய், அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.சி.ஏழுமலை, புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மாநகர மாவட்ட அதிமுக சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

பின்னர், வேலூர் தாசில்தார் சாந்தி மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீயணைப்பு வீரர்களுடன் வாக்குவாதம்:

வேலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து சேருவதற்குள் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்த நிலையில் வந்த ஒரு லாரியில் தண்ணீரும் போதவில்லை. அதேநேரம், மாற்று ஏற்பாடாக தண்ணீர் இல்லாத லாரியால் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், காட்பாடி உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து 4 தண்ணீர் ஏற்றிய லாரிகள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது.வேலூர் சாரதி நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து கொண்டிருக்கும் குடிசை வீடுகளை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். (அடுத்தபடம்) எரிந்த வீடுகளின் சேத மதிப்பு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x