தேமுதிக எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜிநாமா; அரசியலில் இருந்து திடீர் ஓய்வு

தேமுதிக எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜிநாமா; அரசியலில் இருந்து திடீர் ஓய்வு
Updated on
2 min read

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக கட்சிப் பொறுப்பு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

அதில், "உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆகவே, தேமுதிக-வின் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இன்று முதல் (டிச.10) விலகிக்கொள்கிறேன்.

தாயினும் மேலான அன்பு காட்டி, என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க ஆலந்தூர் தொகுதி மக்களின் காலத்தே செய்த இந்த உதவியை எனது வாழ்நாள் முழுதும் நெஞ்சில் நீங்காது நிலை நிறுத்துவதோடு, அவர்களுக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தனது முடிவு தொடர்பாக >கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், வருத்தத்துடன் பிரிவதாக அவர் கூறியிருந்தார்.

தனது விலகல் முடிவு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், உடல் நிலையைக் கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்தாக கூறினார்.

தேமுதிக தலைமையிடம் இருந்து தனக்கு எந்த நெருக்குதலும் இல்லை என்றும், தன் முடிவால் கட்சிக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் குடும்ப ஆதிக்கம், நிர்வாக ரீதியிலான செயல்பாடுகள், கொள்கை முடிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நழுவும் விதத்திலேயே அவர் பதிலளித்தார்.

அதேவேளையில், >மக்களுக்கு தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது என தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் தனது முடிவுக்கு உடல் நலனைக் காரணமாக கூறினாலும், நீண்ட காலமாகவே அவர், தேமுதிகவின் செயல்பாடுகளின் மீது கடும் அதிருப்தியைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் நடவடிக்கையில் நீண்ட காலமாகவே அவர் ஒதுங்கி இருந்ததும் கவனிக்கத்தக்கது.

பண்ருட்டி ராமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கை

1937-ல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள புலியூர் கிராமத்தில் பிறந்த அவர், பொறியியல் பட்டதாரி ஆவார்.

அண்ணா காலத்தில் திமுகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்கட்சி சார்பில், 1967 மற்றும் 1971 தேர்தல்களில் பண்ருட்டி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பணியாற்றினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் அமைச்சரவையில் 1971 முதல் 1977 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.

1977-ல் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோது, அந்தக் கட்சியில் சேர்ந்தார். எம்ஜிஆர் அமைச்சரவையில் பொதுப்பணி, நீர்ப்பாசனம் மற்றும் இரும்பு, எஃகு துறைகளின் அமைச்சர் பொறுப்பை வகித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது, ஜெயலலிதா அணியில் இருந்தார். பின்னர், அதிமுகவில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார். கடந்த 1991-ம் ஆண்டு தேர்தலில் பாமக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ. இவர்தான்.

அதன்பிறகு பாமகவில் இருந்து விலகி, மக்கள் நல உரிமைக் கழகம் என்ற தனிக் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கட்சியை நடத்த முடியாத நிலையில், சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு, செப்டம்பரில் தேமுதிகவில் சேர்ந்து, அக்கட்சியின் அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். 2011 தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 7-வது முறையாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in