இலங்கை வசம் உள்ள 4 தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

இலங்கை வசம் உள்ள 4 தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

இலங்கை வசம் உள்ள 4 தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் காலம் தாழ்த்தாமல் தமிழகத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலால் 73 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. மீதமுள்ள 4 மீனவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கவும், அவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர தற்போது இலங்கை வசம் உள்ள 102 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக ஒப்படைக்க இலங்கையை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களின் 18 படகுகள் ஒப்படைக்கப்படாமல் சேதமடைந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு உரிய நிவாரணத்தை இலங்கை அரசிடம் இருந்து மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசே நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையே அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று, அதன்மூலம் மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒரு நல்ல சூழலை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்று ஜி.கேவாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in