Published : 29 May 2017 08:57 PM
Last Updated : 29 May 2017 08:57 PM

எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த் வரை: கருணாநிதியின் எதிர்நிலை அரசியலில் வென்று நிற்கும் தமிழக தலைவர்கள்

கருணாநிதியின் சிறுமை- பெருமைகளையோ, நல்லது- கெட்டதுகளையோ சொல்லுவதென்றால் எம்ஜிஆரை சொல்லாமல், அவரை ஒப்பிடாமல் யாராலும் நகர முடியாது. எம்ஜிஆர் கதாநாயகன் என்றால் கருணாநிதி எதிரி. கருணாநிதி கதாநாயகன் என்றால் எம்ஜிஆர் எதிரி. அதிமுகவினர் கருணாநிதியை எதிரியாகவே காழ்ப்பு கொட்டினார்கள். இன்னமும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினரும் இதற்கு சளைத்தவர்களல்ல; எம்ஜிஆரை எதிரியாகவே கற்பிதம் செய்துள்ளார்கள். இத்தனைக்கும் எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள்.

எம்ஜிஆர் சினிமாவில் கதாநாயக வலம் வந்தபோது எதிர்மறை கதாபாத்திரத்திற்கும், அதன் அடியாள் பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகள் அமைப்பார். அந்த வரிசையில் பி.எஸ். வீரப்பா, எம்.என். நம்பியார், அசோகன், ஜஸ்டின் என பலரும் சுடர் விட்டார்கள். அவர் அரசியலுக்கு வந்த பின்பு இந்த எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு வேலையில்லாமல் போனது. அதற்காக முன்னணி கதாநாயகர்கள் இவர்களில் சிலருக்கு வாய்ப்பு கொடுத்தும் பார்த்தார்கள். அது எடுபடவில்லை.

ஆனால் அரசியல் வாழ்வில் எம்ஜிஆருக்கு மட்டுமல்ல; தமிழகத்தில் உருவாகியிருந்த- உருவாக இருந்த எல்லோருக்குமே வெறுப்பரசியல் சொட்டும் எதிர்நிலையாகவே விளங்கினார் கருணாநிதி. அந்த எதிர்நிலை அரசியலில் நீந்திக் கடந்தவர்தான் இன்றைக்கு தொடர்ந்து 60 ஆண்டுகாலம் சட்டப் பேரவையில் அங்கம் வகித்து அந்திமக் காலத்திலும் சுடர்விட்டு பிரகாசிக்கிறார்.

ஒரு மனிதரை வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்கிறோம். அதில் கல்வி, செல்வம், பிள்ளை, வீரம் என வரும் 16 பேறுகளை வரிசையும்படுத்துகிறோம். ஆனால் யாருக்காவது 16 பேறுகளும் உள்ள வாழ்வு கிடைத்திருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் எல்லோரும் ஏதாவது ஒரு குறையுடனே இருக்கிறோம். இன்னமும் சுருக்கமாக சொன்னால் பெரும் செல்வம் பெற்றவன் பெரும் நோயுடன் இருக்கிறான், பெரிய, பெரிய பதவிகளில் இருப்பவன் குழந்தை செல்வம் இல்லாதிருக்கிறான்.

பெரிய செல்வந்தனாக உள்ளவன் கல்வியில் தற்குறியாக இருக்கிறான். இப்படி பெரும் குறை எதுவும் இல்லாத வாழ்வு என்பது யோசித்துப் பார்த்தால் தமிழக தலைவர்களில் கருணாநிதிக்கே வாய்த்திருக்கிறது. அவர் மீது வெறுப்பரசியல் கொண்டு காழ்ப்பை உமிழ்பவர்களும் தங்களுக்குள் இருக்கும் காரண காரியங்களை ஆராய்ந்தால் தவறு என்று ஒன்றில்லை என்ற புள்ளியில் மாயவிநோத வெறுப்புகளை அகற்றிப் பார்த்தால் அது கொஞ்சமேனும் புலப்படும். அந்த எல்லையிலேயே கருணாநிதிக்கு சட்டப்பேரவை வைர விழா பாக்கியம் கிடைத்திருப்பதாக கூடத் தோன்றுகிறது.

கருணாநிதி கோவையில் வாழ்ந்த காலம். சிங்காநல்லூரில் அண்ணாசாமி என்ற பஞ்சாலைத் தொழிலாளியின் ஒண்டுக்குடித்தன வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து கொண்டு சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்று கதை வசனம் எழுதி வருகிறார். அந்த நேரத்தில்தான் மூத்த நாடக சபா காரியதரிசி ஒருவரின் சிபாரிசில் எம்ஜிஆர் கருணாநிதியை சந்திக்க வருகிறார். மொசு, மொசுவென்ற நாடக நடிக பாகவதருக்கான நிறைந்த முடியுடன் பரட்டைத் தலையுடன் செக்கச் சிவந்த நிறத்துடன் வந்த எம்.ஜி.ராமச்சந்திரனை பார்க்க அன்று அறையில் கருணாநிதி இல்லை. அவர் இரவு வெகுநேரம் கழித்தே ஸ்டுடியோவில் இருந்து திரும்ப, அவரை சந்திக்கிறார் எம்ஜிஆர். அறையில் கருணாநிதிக்கு மட்டுமேயான உணவை வைத்துவிட்டு போயிருக்கிறார் ஓட்டல் கடைக்காரர். அந்தக் கடையும் பூட்டிவிட்டார்கள். வேறு வழியில்லை. அப்போது இருந்த உணவை இருவரும் பகிர்ந்தே உண்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு 'மருதநாட்டு இளவரசி', 'மலைக்கள்ளன்' என படவாய்ப்புகள் பெற்று சுடர்விடுகிறார் எம்ஜிஆர். சிங்காநல்லூருக்கும், ராமநாதபுரத்துக்கும் 3 மைல் தொலைவு. சிங்காநல்லூரில் கருணாநிதி, ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் இருவரும் குடியிருந்து கொண்டு இந்த இடைவெளியில் இருக்கும் பட்ஷிராஜா, சென்ட்ரல் ஸ்டுடியோக்களில் இருவரும் நட்புடன் பழகுகிறார்கள். அவர் நடிக்கிறார்; இவர் கதை வசனம் எழுதுகிறார். இப்படியான நட்பு பின்னாளில் அரசியலில் விரிந்து அண்ணா கண்ட பொக்கிஷங்களாக நகர்கின்றனர். அண்ணாவுக்குப் பின்பு நெடுஞ்செழியனே என்ற நிலையில் செஞ்சோற்றுக்கடன் கழித்த நிலையிலேயே எம்ஜிஆர் கருணாநிதியை கை காட்டுகிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆருக்கு செல்வாக்கா?

ஆம். நிச்சயமாக என்று அந்தக் காலத்தில் இவர்களை ஊன்றிக் கவனித்த அரசியல், சினிமா புள்ளிகள் சொல்லியிருக்கிறார்கள். சிங்காநல்லூரில் வசித்து மறைந்த பழம்பெரும் நாடகக் கலைஞர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இது. ஒரு கூட்டத்திற்கு அண்ணா சென்றிருந்தார். நல்ல கூட்டம். வரவேற்பு. அண்ணா காரிலிருந்து இறங்கியவுடன் மேல் சட்டையில்லாமல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஓடிவந்து சுற்றுமுற்றும் பார்த்தான். 'என்ன தம்பி தேடறே' என்றார் அண்ணா. 'எம்ஜிஆர் வரலையா' என்று அவரிடமே கேட்டான். 'இல்லை!' என்று அவர் பதில் சொல்லி நகர, சிறுவன் விடவில்லை, 'நீங்க யாரு? எம்ஜிஆர் கட்சியா?'. 'ஆமாம் தம்பி!' என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தார் அண்ணா. இதுதான் அப்போது இருந்த எம்ஜிஆர் மாயை.

'ஆரிய மாயை' என்ற புத்தகத்தை எழுதி திராவிட நாடு கொள்கைகளை வளர்த்து அரசியலில் வென்றவர்தான் அண்ணா. அது அவரின் அரசியலை பறை சாற்றியது. ஆனால் அவருக்கான வெகுஜன ஓட்டு அரசியலை எம்ஜிஆரின் சினிமா மாயையே பெருமளவு அறுவடை செய்தது. அதை சரியாகப் புரிந்து கொண்டே தன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. அப்படியானால் கருணாநிதிக்கு எந்த சக்தியும் இல்லையா? என்றால் இருந்தது.

அது முழுக்க அண்ணாவின் பேச்சு, எழுத்து, அடுக்கு மொழி பேசும் சக்தி. அதையும் மீறிய அரசியல் சாணக்கியம், சாதூர்யம் அவருக்குக் கை கொடுத்தது. அரசாட்சியில் அனைத்து அதிகாரத்தன்மைகளையும் சுவிகரித்த பின்னரே கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்குமான அரசியல் பிணக்கு தொடங்கியது. அந்த பிணக்கை வைத்து கட்சியை உடைக்க மத்திய சக்திகள் துணை புரிந்தன. கருணாநிதி என்பவர் அணு, அணுவாக பேசிப்பேசி கவர்ந்து மக்களை திரட்டிய தலைவர் என்றால் எம்ஜிஆர் என்பவர் லட்சிய இளைஞராக நல்லவராகவே சினிமாவில் நடித்து, நல்லவராகவே வாழ்கையும் வாழ்வதாக மக்களை நம்ப வைத்து, குறிப்பாக தாய்க்குலமே என்று பெண்களை விழித்ததன் மூலம் அந்த சக்திகள் அத்தனையும் தனக்கே குவியுமாறு பார்த்துக் கொண்டவர்.

அந்த மக்கள் சக்தி மாபெரும் பிரளய சக்தியாகவே உருவெடுத்தது. எனவேதான் கருணாநிதியை கலெக்டிங் லீடர் என்றும், எம்ஜிஆரை மாஸ் லீடர் என்றும் நடுநிலையாளர்களை பேச வைத்தது. இந்த சூழ்நிலையில்தான் எமர்ஜென்சி வர, திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுக்கப்பட, பத்திரிகைகள் வசைபாட, சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட, எமர்ஜென்சியில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிறைக் கொடுமை அனுபவிக்க, அதை தன் பிரச்சாரத்தில் வாகாக பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர்.

அப்போது பதியப்பட்ட கருணாநிதியின் மீதான பிம்பங்கள் அரசியல் மாச்சர்யங்கள் கடந்தது. மேடைப்பேச்சு முந்தையதை விட தாழ்நிலை அடைந்தது. தனிமனித தாக்குதல்களுக்கென்றே தலைமைக் கழக பேச்சாளர்கள் தோன்றினர். இப்படி கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதை மிக அழுத்தமாகவே தமிழகச் சூழலில் பதிவு செய்து விட்டார் எம்ஜிஆர். அதை எப்படிப் பார்க்க வேண்டுமென்றால் சினிமாவில் நம்பியார், அசோகன், ஆர்.எம்.வீரப்பன் போன்றோரை எதிர்மறைக் கதாபாத்திரமாகவே கற்பிதம் செய்து நிலை குழைய வைத்ததை விடவும் கூடுதல் மடங்கு விஸ்வரூபம் எடுத்தது.

எம்ஜிஆர் மட்டுமல்ல; யார் வந்து கருணாநிதியை திட்டினாலும் தமிழகத்தில் ஒரு கட்சிக்கு தலைவனாகி விடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் மரணத்திற்கு முன்பே அதை பிரமாதமாக கையாண்டார் ஜெயலலிதா. மேடையில் என்னதான் திமுகவினர் கேவலமாகப் பேசினாலும் திட்டினாலும் எம்ஜிஆர் கருணாநிதியை கலைஞர் என்றும், மு.கருணாநிதி அவர்கள் என்றும் குறிப்பிட்டு பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முதல்வராக இருந்த அவையில் எதிர்க்கட்சி தலைவராக கருணாநிதி எதிர்ப்படும் போது அவருக்கு எழுந்து வணக்கம் செலுத்துபவராகவும், புன்னகைப்பவராகவுமே இருந்தார்.

ஆனால் ஜெயலலிதா அடுத்த நிலைக்குச் சென்றார். கருணாநிதி என்று பெயர் சொல்லியே வசைபாடினார். பல சமயங்களில் வயது வித்தியாசம் கூட கருதாமல் ஒருமையிலேயே விளம்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசியலின் தீயசக்தி என்றே தாக்குதல் நடத்தினார். ஆரம்ப கட்டத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவை ஒரு அரசியல் தலைவராகவே ஏற்றுக் கொள்ளவில்லை. 1989 சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததற்கு பிறகு கருணாநிதி ஜெயலலிதாவை பற்றி பேட்டிகளில் குறிப்பிடும் போதெல்லாம் அந்த அம்மையார் என்றே குறிப்பிட்டு வந்தார்.

1991ல் முதல்வராக வந்த பிறகுதான் ஜெயலலிதா என்ற பெயரையே உச்சரித்தார் கருணாநிதி. அப்படியிருந்தும் கூட மேடை நாகரிகம் கருதி அவர் மீது அவச்சொல் வீசியதில்லை. சில கட்டங்களில் ஜெயலலிதாவின் ஒருமை, ஏகவசனத்தில் திட்டும் பேச்சை கேட்டு, 'நான் இந்த அம்மையாருடன் எல்லாம் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே!' என்று கூட மனம் புழுங்கி பேசியிருக்கிறார்.

இந்த கருணாநிதி எதிர்ப்பு அரசியல்தான் தமிழகத்தில் எம்ஜிஆருக்கு மாற்றாக, அவரை விடவும் வீரியமாக தமிழக முதல்வர் பதவியில் ஜெயலலிதாவை அமர்த்தியது. எம்ஜிஆர் வாழ்ந்த காலம் வரை அவரின் எதிர்ப்பு அரசியல் வலுவை மீறி கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1980ல் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்த நிலையில் தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் 39ல் 38 ஐ வென்றார் கருணாநிதி.

அதை அப்படியே விட்டிருந்து அடுத்த தேர்தல் வரை காத்திருந்திருந்தால் கூட 1983ல் நடக்க இருந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை உடைத்து எடுக்க முயற்சிக்கும் விதமாக ஆட்சியை கலைக்க இந்திரா காந்தியிடம் தூண்டுகோல் போட்டு அதை செயலாற்றியதன் மூலம் எம்ஜிஆர் வீதி, வீதியாக சென்று தாய்க்குலங்களிடம், 'யான் என்ன தவறு செய்தேன்; எதற்காக என் நல்லாட்சியை கலைத்தார்கள்?' என கண்ணீர் சிந்த, அனுதாப அலை அவர் பக்கமாக வீசி விட்டது.

முன்பிருந்த எதிர்ப்பை விட ஒரு வித எரிச்சல் அலை திமுகவிற்கு 1980ல் பெரும் தோல்வியைக் கொடுத்தது. அதன் பிறகு எம்ஜிஆர் அரசியல் சாணக்கியராகி விட்டார். 1989ல் அதிமுக உடைந்ததால் சுலபமாக திமுக ஆட்சியை பிடித்தது. அதையடுத்து வந்த இலங்கை தமிழர் பிரச்சினை, அதற்கான ஆதரவு, திமுகவில் இருந்த வைகோ கள்ளத்தோணியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கச் சென்ற சூழல், இலங்கையில் இந்திய அமைதிப்படை பாதுகாப்பு, ராஜீவ் காந்தி கொலை எல்லாமே கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் வேலைகளை செய்து விட்டது.

1991ல் வென்ற அதிமுகவின் 1996 வரையிலான தான் தோன்றித்தனமான அரசியல் செயல்பாடு கருணாநிதிக்கு மீண்டும் தெம்பைக் கொடுத்தது. தனது நிர்வாகத்திறமையால் நல்லாட்சியே நடத்தினார் கருணாநிதி. ஆனால் அரசியல் ரீதியாக அவர் தன் மகனுக்காக பெரும்பாடு பட வேண்டியதிருந்தது.

எம்ஜிஆர் இருந்தவரை அவரின் எதிர்ப்பரசியலை எதிர்கொண்ட கருணாநிதி தன் பிள்ளைக்காகவே தன் கட்சியில் பிரபலப்பட்ட வைகோவை கட்சியை விட்டே வெளியேற்ற நேர்ந்தது. அவரும் கருணாநிதியை எதிர்க்கும் போதெல்லாம் பெரும் அரசியல் தலைவர் போலவே வைகோ சுடர் விட்டார். ஆனால் எம்ஜிஆர் ஆக முடியவில்லை.

ஏனென்றால் ஏற்கெனவே எம்ஜிஆரை விட எதிர்ப்பு அரசியலில் பிரம்மாண்ட பிம்பமாக ஜெயலலிதா விளங்கியதால் அதன் முன்பு சுடர் விட முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டு சேர்ந்த போது கொஞ்சமாய் ஜொலித்தவர், திரும்ப திமுகவுடன் கூட்டு வைத்த போது தன் அடையாளத்தை இழந்து நின்றார். தமிழக அரசியலை பொறுத்தவரை கருணாநிதியை எதிர்த்தால் மட்டுமே அரசியல் வாழ்கை நடத்த முடியும் என்ற முடிவுடனே அரசியல் கட்சி ஆரம்பித்து வந்த விஜயகாந்த் கருணாநிதியை திட்டும்போதெல்லாம் கறுப்பு எம்ஜிஆர் போலவே ஜொலித்தார்.

அவரே ஜெயலலிதாவை ஓங்கி திட்ட வேண்டிய நிலை வந்தபோது சிக்கலுக்குள்ளாகிப் போனார். கருணாநிதி எதிர்ப்பையும், ஜெயலலிதா எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் செய்வதென்றால் எம்ஜிஆரை போல் இன்னமும் பல மடங்கு பலம் வேண்டும். அது கிடைக்காத போது துவண்டார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் மீடியாக்கள் அலறிய வேளை அவருக்கான தனி பிம்பம் உடைய ஆரம்பித்தது. அவருக்கான உடல்நலக்குறைவு இன்னமும் அரசியல் தேய்வை கொடுத்தது. இந்த கலாட்டாக்கள் எல்லாம் நடந்த வேளை இன்னொரு எதிர் துருவமாக விளங்கிய ரஜினி அரசியலுக்கு வந்தால்? என்ற கேள்வி பலரையும் குடைந்தது.

அது திமுகவை நிறையவே குழம்ப வைத்திருக்க வேண்டும். எனவேதான் 1996ல் ரஜினி வாய்ஸ் நல்ல வாய்ஸ், படையப்பா நீ உடையப்பா என்றெல்லாம் பாராட்டிய கருணாநிதி, ரஜினி எதிர்நிலை எடுத்த வேளையில் எல்லாம் அவரைப் பற்றிய கேள்விகள் வரும்போது நோ கமெண்ட் சொல்ல ஆரம்பித்தார். அந்த நோ கமெண்ட் ஆலாபனை அவர் பேசக்கூடிய நிலையில் இருந்தவரையே தொடர்ந்திருக்கிறது.

இப்போது ஜெயலலிதாவும் இல்லை. விஜயகாந்துக்கும் பெரியதாக வரவேற்பு இல்லை. அடுத்த தேர்தல் வந்தால் சுலபமாக வென்று மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர வேண்டிய காலச் சூழல். இதை எதிர்பார்த்தது போலவே ரஜினிகாந்த் அரசியல் பேசுகிறார். நான் அரசியல் கட்சி தொடங்கினால் கெட்டவர்களுக்கு இடம் இல்லை என்கிறார். போர் வரட்டும் என்கிறார். அரசியல் கட்சி ஆரம்பிக்கிறீர்களா என்று கேட்டால் தேர்தல் வரட்டும் சொல்கிறேன் என்கிறார்.

அவருக்கு தோதாக கமலஹாசனும் வார்த்தைகளை விடுகிறார். ரஜினியை தமிழருவி மணியன் சந்திக்கிறார். நக்மா ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார். இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் தன் தந்தை தலைவருக்கு சட்டப்பேரவை வைர விழா அறிவிக்கிறார். ராகுல்காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் அந்த விழாவுக்கு வருகிறார்கள்.

இதுவெல்லாம் எதை காட்டுகிறது. ரஜினியின் புதிய பிரவேசம் திமுக அரங்குக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை சரிப்படுத்த வேண்டிய கட்டாயம் திமுக தலைவர்களுக்கு உள்ளது. இந்த கட்டாயமே வைர விழா தலைவரை பிரம்மாண்டப் படுத்தி கொண்டாட வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றும் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x