

தானும் வளர்ந்து, சமூகமும் வளர வேண்டும் என நினைப்பவர்கள்தான் உண்மையான இளைஞர்கள் என்று சென்னை காவல்துறை தலைமை அலுவலக உதவி ஐஜி ஆர்.திருநாவுக்கரசு கூறினார்.
தமிழகத்தில் 15,711 காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண், திருநங்கைகள் தகுதியானவர்கள். ஆனால் தகுதியுள்ள பலர் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் காவலராகத் தேர்வாக முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக கிராமத்து இளைஞர்களிடம் இத்தவிப்பு அதிகமாகவே உள்ளது.
இக்குறையைத் தீர்க்கும் வகையில், ‘தி இந்து’ நாளிதழ் சிறப்பு வழிகாட்டுதல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது. இதையடுத்து மதுரை, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் செயல்படும் விஷன் அகாடமியுடன் இணைந்து மதுரை சமூக அறிவியல் கல்லூரி, தேனி மேலப்பேட்டை நாடார் உறவின்முறை மெட்ரிக். பள்ளியில் காவலர் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்து சென்னை காவல்துறை தலைமை அலுவலக உதவி ஐஜி ஆர்.திருநாவுக்கரசு பேசியதாவது:
இதுவரை பள்ளி, கல்லூரிகளில் வெறும் தேர்வுகளை மட்டும் பார்த்தவர்களுக்கு, வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் போட்டித் தேர்வு வித்தியாசமாக இருக்கும். குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தாலே தேர்வில் வெற்றி என நினைக்கும் உலகத்தில், அதிபட்ச மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கை என்பதை அறிய வைப்பதுதான் போட்டித் தேர்வு.
காவலராக ஆக வேண்டும் என்பதையும் கடந்து, ஒவ்வொரு வரும் ஐபிஎஸ் அதிகாரிகளாக வர வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெறுவது அஸ்திவாரமாக இருந்தாலும், ஒவ்வொரு தேர்வி லும் வெற்றி பெற்று ஆலமரமாகத் திகழ வேண்டும். வளர்ச்சி என்பது அவசியம். விதை மரமாகும் வரை ஒவ்வொரு நாளும் அதன் வளர்ச்சி உள்ளது. ஒரு சிலர் மட்டுமே தானும் வளர்ந்து, சமூகமும் வளர வேண்டும் என நினைக்கின்றனர். அவர்கள்தான் உண்மையான இளைஞர்கள்.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனின் லட்சியத்தில் அமைகி றது. லட்சியம் இல்லாத மனிதன் சரியான திசையில் செல்ல முடியாது. அந்த லட்சியம் வாழ்வில் படிப்படியாக அமைய வேண்டும். ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும். இளைஞர்கள் யாராக ஆக விரும்புகிறார்களோ அந்த விருப்பம் நிறைவேற தினமும் உழைக்க வேண்டும்.
சாதாரண தேர்வுக்கும், போட்டித் தேர்வுக்கும் வித்தியாசம் உள்ளது. சாதாரண தேர்வில் தெரிந்த விடையை எழுதலாம். போட்டித் தேர்வில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். கேள்வி கேட்டவுடன் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விடையை ஒதுக்கத் தெரிய வேண்டும். அவ்வாறு இருந்தால் வாழ்வில் உயர முடியும். நம்பிக்கை வைத்து பயின்றால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் மதுரை சமூக அறிவியல் கல்லூரி நிறுவனர் டிவிபி ராஜா, செயலர் தர்மாசிங், விஷன் அகாடமி இயக்குநர் அஸ்வத் உட்பட பலர் கலந்துகொண்டனர். தேனி பயிற்சி முகாமில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான கேள்வித் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
பயிற்சி முகாமை ‘தி இந்து’ வுடன் மதுரை சமூக அறிவியல் கல்லூரி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக். பள்ளி, ஸ்பீடு அகாடமி, ஏஸ்வா பப்ளிகேஷன்ஸ் ஆகியவை இணைந்து வழங்கின.